அண்மையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’, ‘தாயுமானவர் திட்டம்’, என அடுக்கடுக்காக பல திட்டங்களை அறிவித்து, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே நடைமுறையில் இருந்து வரும் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ உள்ளிட்ட திட்டங்களும் புதிய இத்திட்டங்களுடன் தொடர்கின்றன.
இத்திட்டங்களில் குறிப்பாக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் சனிக்கிழமை தோறும் நடக்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்களுக்கு தற்போது கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இத்திட்டங்களுக்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்படாமல் இருக்கின்ற அலுவலர்களையே வைத்து இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இந்த சிறப்பு முகாம்களால் விடுமுறை நாட்களிலும் ஓய்வின்றி பணி செய்ய வேண்டியிருப்பதாக வேதனை தெரிவிக்கும் அரசு ஊழியர்கள், அரசு ஒதுக்கீடு செய்யும் தொகையைக் கொண்டு இந்த முகாம்களை நடத்த இயலவில்லை. முகாம் நடத்துவதற்கான செலவினங்களையும் தாங்களே மேற்கொள்வது கடினமாக இருப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
சுகாதாரத் துறையினரால், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடத்தப்பட்டது. மருத்துவம் சார்ந்த அனைத்து அலுவலர்களும் முகாம்களில் தீவிரம் காட்ட, முகாமுக்கு வந்திருந்த மக்களோடு, சில அரசு அலுவலர்கள் போட்டோக்கள் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர்.
“முகாமே இப்போதுதான் தொடங்குகிறது. அதற்குள் வந்திருந்த மக்களை வைத்து போட்டோ எடுக்கிறீர்களே! என்ற கேட்டபோது, “கூட்டுறவுத் துறை சார்பில். ஊழியர்கள் தரப்பில் இருந்து ஒவ்வொரு முகாமுக்கும் ஆட்களை அழைத்து வர வேண்டும். இவர்களை வைத்து போட்டோ மற்றும் செல்ஃபி எடுத்து மேலிடத்துக்கு அனுப்பி விடுவோம்” என்று அங்கிருந்த ஊழியரில் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கு ஒத்துழைப்பு அளித்த மக்களிடம் கேட்டபோது, “நாங்கள் இதே ஊர் தான். அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, கட்சிக்காரர்களால் இந்த முகாமுகக்கு அழைத்து வரப்பட்டோம். ‘ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா?’ என்று கேட்டனர். நாங்களும் சரி என்று கூறி நின்றோம்” என்று தெரிவித்தனர்.
இதுபோன்று மகளிர் திட்டப் பெண் பணியாளர்களும், இந்த முகாமுக்கு வந்து அங்கிருந்த சில பெண்களை வைத்து செல்ஃபி எடுத்துக் கொண்டு, அதை அவர்களின் உயரதிகாரிகளுக்கு பகிர்ந்து கொண்டிருப்பதை காண முடிந்தது.
பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையே, ஒவ்வொரு துறையின் அதிகாரிகளும் அவர்களின் கீழ் உள்ள அலுவலர்களுக்கு இதுபோன்று படங்களை எடுத்து அனுப்ப உத்தரவிட்டிப்பதன் விளைவு, இதுபோன்று அவர்களைச் செய்ய வைக்கிறது என்ற கருத்து நிலவுகிறது-
இதுகுறித்து கடலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் இளஞ்செல்வியிடம் கேட்டபோது, “இதுபோன்று போட்டோக்கள் எடுத்து எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று எந்த அலுவலர்களுக்கும் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஒவ்வொரு முகாமையும் சிறப்பாக நடத்தவே மெனக்கெடுகிறோம். தற்போது, நாங்கள் தாயுமானவர் திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.