சென்னை: சட்ட விதிகளுக்கு உட்பட்டு அரசின் திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ தி்ட்டங்களுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மு்ன்னாள் அமைச்சரும், அதிமுக எம்.பி-யுமான சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் இனியன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்திருந்த மனுக்களில், ‘‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட் டுள்ள விளம்பரத்தில் திமுக சின்னம் இடம்பெற்றுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரண்: அந்த விளம்பரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படமும், இந்நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் படமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணானது. அரசின் திட்டத்தை தனி மனித சாதனை போல விளம்பரப்படுத்துவது ஏற்புடையதல்ல. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முற்றிலுமாக அரசியல் நோக்கம் கொண்டது. அரசு பணத்தை அரசியல் காரணங்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்வது சரியான நடைமுறையல்ல.
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலை மனதில் வைத்துதான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. திமுகவினர் இந்த திட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே உங்களுடன் ஸ்டாலின் விளம்பரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை பயன்படுத்தவும், அந்த விளம்பரத்தில் இந்நாள் முதல்வர் ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும்’’ எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தடை விதிக்க கோரிக்கை: அப்போது சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘‘உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படுகிறது. இது உச்ச நீதிமன்ற மற்றும் தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது. குறிப்பாக அரசின் விளம்பரங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், சின்னங்கள், பெயர்கள், புகைப்படங்கள் இடம் பெறக்கூடாது.
அரசின் பணத்தை செலவு செய்து மேற்கொள்ளப்படும் இந்த திட்டங்களில் முதல்வரின் பெயரையோ அல்லது புகைப்படங்களையோ பயன்படுத் தக்கூடாது என தடை விதிக்க வேண்டும். மேலும் ஆக.2 அன்று தொடங்கவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டத்திலும் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்றார்.
அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘‘அரசின் திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில் முதல்வர் படம் மட்டுமின்றி, துறை அமைச்சர்களின் படங்களையும் பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே அரசு விளம்பரங்களின் நடைமுறை பின்பற்றப்படுகிறது’’ என்றார்.
அதிமுக ஆட்சியில்… திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத் துடன் தொடரப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் அம்மா உணவகம், அம்மா திட்டம் போன்ற பெயர்களில் பல்வேறு தி்ட்டங்கள் செயல் படுத்தப்பட்டன. மத்திய அரசு பிரதமர் மோடியின் பெயரில் நமோ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆந்திராவில் ஜெகன் திட்டம் தொடங்கப்பட்டது.
அதுபோலத்தான் தமிழகத்திலும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன’’ என்றார். அதையடுத்து நீதிபதிகள், ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உரிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு அரசின் திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம். அரசு விளம்பரங்கள், அரசு திட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகளை முறையாகப் பி்ன்பற்ற வேண்டும்.
இந்த வழக்கில் தமிழக அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் திமுக தரப்பில் 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற அரசி்ன் திட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது’’ என உத்தரவிட்டுள்ளனர்.