கடலூர்: பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசு வழங்கும் சேவைகள் எளிமையாக கிடைத்திடும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 14) இரவு சென்னையில் இருந்து ரயில் மூலம் சிதம்பரம் வந்து தனியார் ஹோட்டலில் தங்கினார். இவருக்கு திமுக சார்பில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று (ஜூலை 15) காலை 9.30 மணிக்கு சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசு வழங்கும் சேவைகள் எளிமையாக கிடைத்திடும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தினை சிதம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தில் கீழ் தமிழ்நாடு முழுவதும் நகர்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும், கடலூர் மாவட்டத்தில் நகர்புறப் பகுதிகளில் 130 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 248 முகாம்களும் நடத்தப்பட உள்ளது. முகாம் நடைபெறும் பகுதிகளில் 2 நாட்களுக்கு முன்பாக தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களின் வீடு வீடாக சென்று முகாம் குறித்த விவரங்களை தெரியப்படுத்துவதோடு, விண்ணப்பங்களும் வழங்கப்பட உள்ளன.
மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் முகாம் நடைபெறும் நாளன்று முகாமுக்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் பேட்டை பகுதியில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அர்ப்பணித்தவரான எல்.இளையபெருமாள் திருவுருவச் சிலையுடன் ரூ.6.39 கோடி மதிப்பீட்டில் கட்டிப்பட்டுள்ள நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.
அமைச்சர்கள் கே.என் நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், சாமிநாதன்,திருமாவளவன் எம்.பி, விஷ்ணு பிரசாத் எம் பி, எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன், நெய்வேலி சபா ராஜேந்திரன், வேல்முருகன், காட்டுமன்னார்கோயில் விடுதலைச் செல்வன் செல்வன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.