மக்களைத் தேடி அரசு என்ற நோக்கில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ முகாம்களை தமிழகம் முழுக்க நடத்திக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இந்த முகாம்கள் மூலம் நகர் பகுதிகளில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகளும், கிராமப் பகுதிகளில் 15 துறைகள் சார்ந்த 45 சேவைகளும் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
45 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு என அறிவிக்கப்பட்டிருப்பதால் அனைத்து இடங்களிலுமே இந்த முகாம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் நவம்பர் வரைக்கும் இப்படி 10 ஆயிரம் முகாம்களை நடத்தப் போவதாகச் சொல்லி இருக்கும் அரசு, அதற்கான நிதியை போதிய அளவில் ஒதுக்காததால் அல்லாடிக் கொண்டிருப்பதாக உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறையினர் புலம்பித் தவிக்கிறார்கள்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை அமைச்சர்கள், எம்பி., எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும், முகாம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் திமுக-வினருக்கு அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது. ஆனால், எல்லா இடங்களிலும் ஆளும் கட்சியினர் அப்படி மெனக்கிடுவதாகத் தெரியவில்லை.
பெரும்பாலும் தனியார் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களிலேயே இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு முகாமை நடத்த அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்துக்கு ரு.32 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், உணவு, இணைய வசதி, உபகரணங்கள், பந்தல் என சர்வசாதாரணமாக ரு.1 லட்சத்தை தாண்டிவிடுகிறதாம் செலவு. இதனால் எஞ்சிய தொகையை யார் கையில் இருந்து கொடுப்பது என்று தெரியாமல் உள்ளாட்சித் துறையினர் கையை பிசைகிறார்கள். சில இடங்களில் இதைச் சமாளிக்க, முகாம்களில் உடனடி தீர்வுகளைப் பெறும் பயனாளிகளிடம் தங்களது கஷ்டத்தைச் சொல்லி கையேந்துவதாகவும் சொல்கிறார்கள்.
மேலும், முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களை உடனடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதாலும், விடுமுறை நாட்களிலும் முகாம்கள் நடத்தப்படுவதாலும் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு தாங்களும் பரிதவிப்பதாக வருவாய்த் துறையினரும் புலம்புகிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய விருதுநகர் மாவட்ட உள்ளாட்சி துறை அலுவலர்கள் சிலர், “தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது.
ஆனாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் நபர்களுக்குத்தான் காண்ட்ராக்ட் பணிகள் ஒதுக்கப்படுகின்றன. இப்படி, தொடர்ந்து தங்களுக்கானதை சாதித்துக் கொள்ளும் அவர்கள், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை செம்மையாக நடத்த வேண்டும் என அக்கறைப்படுவதே இல்லை.
அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ-க்கள் பங்கேற்கும் முகாம்களுக்கு மட்டும் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் இவர்கள், மற்ற முகாம்களை கண்டுகொள்வதில்லை. இதனால் முகாமை நடத்துவதற்கான செலவுகளை சமாளிக்க முடியாமல் நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம். இந்த சிக்கலை சமாளிக்க முகாமுக்கான செலவு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றனர்.
வருவாய்த் துறையினரோ, “இம்முகாமில் அளிக்கப்படும் சுமார் 90 சதவீத சேவைகள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்டது. முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று சொல்லப்படுவதால் நாங்கள் கடும் பணிச்சுமைக்கு ஆளாகி வருகிறோம். முகாம்களுக்காக எங்களுக்கு தனியாக எந்த நிதியும் ஒதுக்குவதில்லை.
இதனால் செப்டம்பர் 3, 4 தேதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறோம். எங்களை போராட்டத்தில் குதிக்கவிடாத அளவுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்கிறார்கள்.
இதனிடையே, சிவகங்கை மாவட்ட உள்ளாட்சித் துறை அலுவலர்கள், முகாம்களுக்கான செலவு தொகையை உயர்த்தி வழங்கக் கோரி ஒருநாள் மட்டும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்திருக்கிறார்கள். அரசுத் துறையின் சேவைகளை மக்களின் இருப்பிடத்துக்கே சென்று அளிக்க வேண்டும் என்பதற்காக ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை’ செயல்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசின் முயற்சி பாராட்டுக்குரியதே.
அதேசமயம், இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அலுவலர்களுக்கு இருக்கும் நடைமுறை சிரமங்களையும் புரிந்துகொண்டு அதையும் சரிசெய்ய நடவடிக்கை எடுத்தால் திட்டம் இன்னும் சிறக்குமே!