‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் திமுக-வினர், வீடு வீடாகச் சென்று மக்களிடம் 6 கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். இவை பெரும்பாலும் ஆம் என்று பதிலளிக்கும் விதத்திலேயே இருக்கின்றன. இவற்றுக்கு பதில்களைப் பெற்று விருப்பமுள்ளவர்களை கட்சியில் சேர்த்து வருகிறது திமுக. இரண்டு கோடி பேரை கட்சியில் சேர்க்கும் திட்டத்துடன் இதைச் செயல்படுத்தி வரும் திமுக-வினர், வீடுகளில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற ஸ்டிக்கரையும் மறக்காமல் ஒட்டி வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக-வினரும், ‘உருட்டுகளும், திருட்டுகளும், துரோக மாடல் உருட்டுகள்’ என்ற தலைப்பில் 10 கேள்விகளை தயார் செய்துள்ளனர். இவை பெரும்பாலும் இல்லை என்று பதில் சொல்லும் விதமாகவே உள்ளன. இவர்களும் வீடு வீடாகச் சென்று இந்தக் கேள்விகளுக்கு பொதுமக்களிடம் பதில்களைக் கேட்டு வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, அரசின் சார்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த முகாம்கள் மூலம் சுமார் 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக அரசின் இந்த அறிவிப்புக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் கோவை அதிமுக-வினர், ‘எங்களுடன் எடப்பாடியார்’ என்று டிஜிட்டல் போர்டுகளை வீடுகளின் முன்பு பொருத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக பேசிய அதிமுக நிர்வாகிகள், “எங்களது பொதுச்செயலாளர் இபிஎஸ் தொடங்கி இருக்கும் ‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்…’ பிரச்சாரப் பயணமானது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. திமுக-வினரின் உருட்டுகளுக்கும் புரட்டுகளுக்கும் இபிஎஸ் தனது பிரச்சாரத்தின் மூலம் பதிலடி கொடுத்து வருகிறார். இந்தச் சூழலில், கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்களே ‘எங்களுடன் எடப்பாடியார்’ என்ற டிஜிட்டல் போர்டுகளை பொருத்தினர். இதைப் பார்த்துவிட்டு கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தெற்கு உள்ளிட்ட தொகுதிகளிலும் டிஜிட்டல் போர்டுகளை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்” என்றனர்.
கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அம்மன் அர்ச்சுனனிடம் கேட்டதற்கு, “கோவை மாவட்டத்தில் வீடுவீடாக வைக்கப்பட்டு வரும் ‘எங்களுடன் எடப்பாடியார்’ டிஜிட்டல் போர்டுகளை கட்சியினர் மூலம் தயார் செய்து அளித்து வருகிறோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எங்கள் கட்சித் தலைவரின் செயல்பாடுகளை நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறோம். அதற்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘எங்களுடன் எடப்பாடியார்’ திட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். எடப்பாடியார் எங்களுடன் இருப்பதால் இந்த போர்டுகளை நாங்கள் வைக்கிறோம். இதை திமுக-வினர் தங்களுக்குப் போட்டியாக நினைத்தால் அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை; நாங்கள் எதற்கும் தயார்” என்றார்.
தேர்தலை முன்னிறுத்தும் திமுக-வின் ஒவ்வொரு செயலுக்கும் இப்படி அதிமுக கவுன்டர் கொடுக்க ஆரம்பித்தால் தேர்தல் களம் ரணகளம் தான்!