சென்னை: உங்களுக்காக நான் இருக்கிறேன். எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை. நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம் என்று தொண்டர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் குரலாகவும், பாதுகாவலனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் பாமக 16-ம் தேதி 37-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இம் மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டி எழுப்பிய ராமதாஸுக்கு வணக்கங்களையும், உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்.
36 ஆண்டுகள் ஆகியும் நம்மால் இன்னும் ஆட்சியை பிடிக்க முடியாமல் இருப்பது பெரும் குறையாகவும், வருத்தமாகவும் இருந்தாலும்கூட தமிழக மக்களுக்காகவும், சமூகநீதிக்காகவும் நாம் ஆற்றிய பணிகள் மனதுக்கு நிறைவைத் தருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர் குழுக்களை அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பாமகாவால் தமிழகத்துக்க கொண்டு வரப்பட்ட திட்டங்கள் ஆகியவை குறித்து விளக்க வேண்டும். தமிழக மக்களை திமுக ஆட்சியின் கொடுமைகளில் இருந்து காக்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.
ராமதாஸ் பிறந்தநாளான ஜூலை 25 முதல் தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ம் தேதி வரை தமிழக முழுவதும் மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.
தமிழகத்தை காப்பதுதான் பாமகவின் நோக்கம் எனும் நிலையில், இவற்றை சிறப்பாக செயல்படுத்துவதற்கான உறுதிமொழியை ஏற்றுக்கொள்வது தான் பாமகவின் 37-ம் ஆண்டு தொடக்கவிழாவில் நாம் அனைவரும் செய்ய வேண்டிய முதன்மை செயலாகும்.
உங்களுக்காக நான் இருக்கிறேன். எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை. நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம். இது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.