ஈரோடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டு, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிய பயணியை, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.
கோவையில் இருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த இன்டர்சிட்டி அதிவேக ரயில், ஈரோடு ரயில் நிலைய முதல் நடைமேடைக்கு நேற்று வந்தது. அப்போது ரயிலில் இருந்து தேநீர் வாங்குவதற்காக பயணி ஒருவர் இறங்க முயற்சித்தார். ரயில் வேகம் குறையாத நிலையில், ஓடும் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய அவர் இழுத்து செல்லப்பட்டார்.
இதனை கண்ட ரயில்வே நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் அப்துல் ரபிக், துரிதமாகச் செயல்பட்டு பயணியை பிடித்து இழுத்து, காயமின்றி காப்பாற்றினார். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியான நிலையில் காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
மேலும், ரயில்வே பாதுகாப்பு படை காவலர் அப்துல் ரபிக்கின் துரித நடவடிக்கையை பாராட்டி சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் சவுரவ்குமார் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.