சென்னை: தமிழகம் முழுவதும் அரசின் சேவைகளைப் பெற அதிக அளவில் விண்ணப்பங்கள் வரும் நிலையில், இ-சேவை மைய சர்வர் அவ்வபோது முடங்கி பணிகள் பாதிக்கப்படுகிறது. இதனால் மாணவர் சேர்க்கைக்கான சான்றை உரிய காலத்தில் பெற முடியாமல் பெற்றோர் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் அரசு கேபிள் டிவி நிறுவனம், கூட்டுறவுத் துறை, எல்காட் என பல்வேறு துறைகளுக்கு அரசு இ-சேவை மையங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.
வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் வழங்கும் சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பது, குடும்ப அட்டை கோரி விண்ணப்பம், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர் போன்றோர் சமூகப் பாதுகாப்பு திட்டங்களைப் பெறுதல் போன்றவற்றுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட ஆன்லைன் சேவைகள் கட்டண அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்போது சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மேல்நிலைக் கல்வி மற்றும் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கத் தேவையான முதல் தலைமுறைப் பட்டாதாரி சான்று போன்ற ஆவணங்களைப் பெற மே மற்றும் ஜூன் மாதங்களில் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கின்றனர்.
மேலும், பள்ளி தொடக்க வகுப்புகளில் சேரவும் மாணவர்களின் பெற்றோர் சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச்சான்று போன்றவற்றைப் பெற விண்ணப்பிக்கின்றனர். இதனால் ஒவ்வோப் ஆண்டும் லட்சக்கணக்கானோர் மே, ஜூன் மாதங்களில் அரசு இ-சேவை மையங்களை நாடுவதால், இ-சேவை மையங்களில் சர்வர் முடங்கி விடுகிறது. ஒரு நிமிடத்துக்கு 400 விண்ணப்பங்களை ஏற்கும் வகையிலான சர்வரைத்தான் மின் ஆளுமை முகமை நிறுவி இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது 12 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக இ-சேவை மையங்களில் சர்வரின் வேகம் குறைந்து, ஏராளமான பெற்றோர்கள் காத்திருந்து திரும்பி செல்லும் நிலை நிலவி வருகிறது.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் வருவாய்த் துறை சார்பில் நடத்தப்படும் ஜமாபந்தி முடிந்து, அது தொடர்பான ஆவணங்களும் பதிவேற்றப்படுவதாலும் இ-சேவை மையங்கள் சர்வரின் வேகம் குறைவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இ-சேவை மைய பணியாளர்கள் கூறும்போது, “நாளொன்றுக்கு 10 விண்ணப்பங்களை பதிவேற்றி வந்த நிலையில், தற்போது சுமார் 5 அல்லது 6 விண்ணப்பங்களை மட்டுமே பதிவேற்ற முடிகிறது. பலர் காந்திருந்து திரும்பிச் செல்வது வேதனை அளிக்கிறது” என்றனர்.
சென்னை மாநகராட்சியின் 35-வது வார்டு அலுவலகத்தில் (எருக்கஞ்சேரி) இயங்கி வரும் இ-சேவை மையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பெற்றோர் சிலர் கூறும்போது, “இங்கு வரும்போதெல்லாம் சர்வர் மெதுவாக வேலை செய்கிறது. இதனால் பலமுறை வந்து செல்ல வேண்டியுள்ளது.
அதனால் மே, ஜூன் மாதங்களில் இ-சேவை மைய சர்வர் முடங்காமல் இருக்க உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்” என்றனர். இது தொடர்பாக மின்னாளுமை முகமை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இப்பிரச்சினைக்கு தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.