அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரம் முப்பெரும் விழாவில் இளையராஜாவின் ஆன்மிக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடி ரசித்துப் பார்த்தார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கோயில் வளாகத்தில் திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் தேவார திருவாசக பதிகங்களை ஓதுவார்கள் பாடினர். இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலில் ‘நான் கடவுள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஓம் சிவோஹம்’ பாடல் இசைக்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி கைகளால் தாளமிட்டப்படி ரசித்து பார்த்தார். பின்னர் தான் இசையமைத்த திருவாசகம் ஆல்பத்தில் இடம்பெற்ற மாசற்ற ஜோதி பாடலை இளையராஜா பாடினார்.