வீட்டில் டிவி பார்க்க வந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடலூர் மாவட்ட இளைஞருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வீட்டுக்கு டிவி பார்க்க வந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்துள்ளதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரி்த்த கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் அந்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த 2021-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பிரபாகர், இது பொய் வழக்கு. சிறுமியின் வீட்டிலேயே டிவி இருப்பதாக சிறுமியின் பாட்டி சாட்சியம் அளித்துள்ளார். சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதாக மருத்துவ அறிக்கையிலும் கூறப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட நபருடன் அவரது தாயாரும் வீட்டில் எப்போதும் உடன் இருந்து வந்துள்ளார். சிறுமியின் வாக்கு மூலமும், அவரது தாயாரது வாக்கு மூலமும் முரண்பாடாக உள்ளது. உண்மையில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் தாயார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்துள்ளார். அவரிடம் தனது தாயார் பெயரில் பாலிசி எடுக்க தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள மனுதாரர் ரூ. 20 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் பாலிசியும் எடுக்காமல், அந்த தொகையை திருப்பியும் கொடுக்காமல் சிறுமியின் தாயார் ஏமாற்றியுள்ளார்.
அந்த பணத்தை திருப்பிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வி்ட்டதாக பொய் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை கடலூர் நீதிமன்றமும் சரியாக விசாரிக்காமல் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது, என்றார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘ இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் 48 நாட்கள் கழித்தே மனுதாரர் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் திருமணம் ஆகாதவர். சிறுமியின் தாயார் அளித்த வாக்கு மூலம் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. இந்த குற்றச்சாட்டு நம்பும்படியாக இல்லை. சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததாக அறிக்கையில் கூறப்படவில்லை. எனவே மனுதாரருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்கிறேன், என உத்தரவிட்டுள்ளார்.