தருமபுரி: ‘ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மைக்குப் புறம்பாக இல்லாதது பொல்லாததைச் சொல்லி, பீதியை கிளப்புவார். இதை மட்டும் தான் அவர் செய்கிறார்’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “வரலாற்றுப் பெருமையும், எழில்மிக்க ஒகேனக்கல்லும் இருக்கும் இந்த தருமபுரி மாவட்டத்தில், 362 கோடியே 77 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 73 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 512 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 44 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 70 ஆயிரத்து 427 பேருக்கு 830 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு முதல் முறையாக ஒரு முக்கியமான திட்டத்தை வேளாண் பெருங்குடி மக்களுக்காக திறந்து வைத்துவிட்டு வந்திருக்கிறேன். விவசாயப் பெருங்குடி மக்கள் பயிர்க்கடன் பெறத் தொடர்புடைய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பித்து, அந்தக் கடனைப் பெற ஒரு வாரம் வரை காத்திருக்கின்ற நடைமுறைதான் இப்போது இருக்கிறது. இந்த நடைமுறையை மாற்றி, விவசாயிகள் நலன் கருதி காலதாமதத்தை தவிர்க்க, கூட்டுறவு வங்கிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் மூலமாக பயிர்க்கடனுக்கு விண்ணப்பிக்கின்ற நடைமுறையையும், விண்ணப்பித்த அன்றைக்கே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர்க்கடன் நேரடியாக வழங்குகின்ற நடைமுறையையும் இந்த தருமபுரியில், துவக்கி வைத்துவிட்டு இங்கே வந்திருக்கிறேன்.
இந்த விழாவில் சில அறிவிப்புக்களை நான் வெளியிட விரும்புகிறேன். முதல் அறிவிப்பு – சித்தேரி ஊராட்சியில் இருக்கக்கூடிய 63 மலைக்கிராமங்களில் வசிக்கின்ற பழங்குடியின மக்களும், கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாழுகின்ற பொதுமக்களும், பல்வேறு பணிகளுக்கு பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்வதற்கான தூரம் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அதனால், இந்த கிராமங்கள் எல்லாம் அருகாமையில் இருக்கின்ற அரூர் வருவாய் வட்டத்தில் இணைக்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு – ஒகேனக்கல் – தருமபுரியை இணைக்கக் கூடிய மாவட்ட நெடுஞ்சாலையில், தருமபுரியில் இருக்கின்ற ஆட்டுக்காரம்பட்டி முதல் பென்னாகரம் வரை உள்ள 25 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைப்பகுதி, தற்போதுள்ள இருவழித்தடத்தில் இருந்து நான்கு வழித்தடமாக, 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கட்டமாக மேம்படுத்தப்படும்.
மூன்றாவது அறிவிப்பு – நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் பரிகம் ஊராட்சியில், பரிகம் முதல் மலையூர் வரை உள்ள வனச்சாலை 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தார்ச் சாலையாக மேம்படுத்தப்படும். நல்லம்பள்ளியில் இருக்கின்ற அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஏழரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும்.
நான்காவது அறிவிப்பு – அதிக அளவில், புளி உற்பத்தி செய்கின்ற தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், 11 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு – அரூர் நகராட்சியில் வாழ்கின்ற மக்களின் நலன் கருதி, வள்ளிமதுரை குடிநீர் வழங்கல் திட்டம் புதிய குழாய்களை பதித்தும், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தும், 15 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
இப்படி, மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியின், ஒவ்வொரு தனிமனிதருடைய எதிர்பார்ப்பையும் நிறைவேற்றித் தருகின்ற ஆட்சியாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது. சொன்னதை செய்வோம் – செய்வதைத்தான் சொல்வோம் என்று தலைவர் கருணாநிதி காட்டிய வழியில் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
2021 தேர்தலுக்கு முன்பு, விடியல் பயணம் திட்டம் குறித்த வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் சொன்னோம். உடனே நமக்கு எதிரானவர்கள் என்ன சொன்னார்கள்? இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி – இதனால், பேருந்துகளை குறைத்து விடுவார்கள் – பேருந்துக் கட்டணத்தை உயர்த்திவிடுவார்கள் என்று தங்கள் இஷ்டத்துக்கு கதை – திரைக்கதை வசனமாக எழுத தொடங்கினார்கள். ஆனால், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், தமிழ்நாட்டின் நிதிநிலைமையை பாழ்படுத்தியதையும் மீறி, சொன்னதுபோல், ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைக்கே, விடியல் பயணம் திட்டத்துக்கு கையெழுத்திட்ட கை தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய கை.
இந்தத் திட்டத்திற்கு ஆகின்ற பணத்தை, செலவாக பார்க்காமல், பெண்களுக்கான சேமிப்பாக, மகளிர் முன்னேற்றத்திற்கான முதலீடாகத்தான் நாங்கள் நினைத்தோம்! இதனுடைய பலன் சமூகத்தில் எதிரொலிக்க தொடங்கிவிட்டது! ஒவ்வொரு மாதமும் சுமார் ஆயிரம் ரூபாய் என்று நாம் ஆட்சிக்கு வந்த இந்த 51 மாதத்தில், ஒவ்வொரு மகளிரும் 50 ஆயிரம் ரூபாய் சேமித்திருக்கிறார்கள்! எவ்வளவு பெரிய புரட்சி இது! யாராலும் மாற்ற முடியாத, மறுக்க முடியாத சாதனை இது! அதனால்தான், இப்போது செய்திகளில் பார்த்திருப்பீர்கள்… இந்த விடியல் பயணம் திட்டத்தை, கர்நாடகா மாநிலத்திலும், ஆந்திரா மாநிலத்திலும் தற்போது நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்!
அதனால்தான் சொல்கிறோம்… நாட்டின் அத்தனை வளர்ச்சித் திட்டங்களுக்கும் தமிழ்நாடுதான் முன்னோடி! திராவிட மாடல்தான் இந்தியாவிற்கான திசைகாட்டி. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான், ஆட்சிக்கு எதிராக சில விஷமிகள் அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் சொல்வதை பற்றி நான் கவலைப்படவில்லை. அதுதான் அவர்கள் அரசியல்! அவர்களைவிடவும் மலிவான அரசியல் செய்கின்றார் ஒருவர்! யாரென்று தெரியும் உங்களுக்கு – அவர்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு நியமித்திருக்கின்ற நம்முடைய ஆளுநர் ரவி அவர்கள்.
ஆளுநர் மாளிகையில் இருக்கின்ற அவர் செய்கின்ற வேலை என்ன தெரியுமா? தி.மு.க. ஆட்சி மேல் அவதூறு பரப்புகின்றார்! தி.மு.க. மேல் அவதூறு பரப்புவார்! திராவிடத்தைப் பழிப்பார்! சட்டங்களுக்கு ஒப்புதல் தரமாட்டார்! இல்லாத திருக்குறளை அச்சிட்டு வழங்குவார்! தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பார்! நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்களை இழிவுபடுத்துவார்! தமிழ்நாட்டின் கல்வி, சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு பற்றியெல்லாம், உண்மைக்குப் புறம்பாக இல்லாதது பொல்லாததைச் சொல்லி, பீதியை கிளப்புவார்! இதை மட்டும் தான் அவர் செய்கிறார்.
இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதை நாங்கள் உங்களிடம் சொல்கிறோமோ, இல்லை நீங்கள் எங்களிடம் சொல்கிறீர்களா, இல்லை. ஒன்றிய பாஜக அரசு வெளியிடுகின்ற புள்ளிவிவரங்களே சாட்சியிருக்கிறது.
அதுமட்டுமல்ல, இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாடு அனைத்து விதத்திலும் மிகச் சிறந்த மாநிலமாக இருக்கிறது. இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல், எரிச்சலில், தன்னுடைய கோபத்தை புலம்பலாக பொதுமேடைகளில் கொட்டித் தீர்க்கிறார்.
பள்ளிக் கல்வியில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறோம். தமிழ்நாடு அமைதியான மாநிலமாக இருப்பதால்தான் இந்த 4 ஆண்டு காலத்தில், 10 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை நாம் ஈர்த்திருக்கின்றோம்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையாம். ஆளுநர் கண்டுபிடித்திருக்கிறார். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்ற மாநிலங்களில் பா.ஜ.க. ஆளுகின்ற உத்தர பிரதேசம்தான் முதலிடத்தில் இருக்கிறது. அதனால் ஆளுநர் அவர்களே, நீங்கள் கம்பு சுற்ற வேண்டியது இங்கே இல்லை – பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் தான். அங்கு சென்று கம்பு சுற்றுங்கள் –தமிழ்நாட்டில் இல்லை. அங்கு சென்று சுற்றுங்கள்.
தொடர்ந்து தமிழுக்கு எதிராக – தமிழ்நாட்டுக்கு எதிராக – தமிழர்களுடைய உணர்வுகளுக்கு எதிராக – பேசிவிட்டு வருகின்ற ஆளுநரை வைத்து, தன்னுடைய இழிவான அரசியலை ஒன்றிய பாஜக அரசு செய்கின்றது. என்னைப் பொறுத்தவரையில், அவர் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கவேண்டும். அவர் இருப்பதால்தான் நமக்கு நல்லது என்று ஆரம்பத்தில் இருந்தே நானும் சொல்லிக் கொண்டு வருகிறேன்.
ஏனென்றால், நமக்குள் இருக்கின்ற மொழி உணர்வை, இன உணர்வை, திராவிட இயக்கக் கொள்கை உணர்வை பட்டுப் போக விடாமல் – கொள்கை நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்கின்ற வேலையை ஆளுநர் ரவி சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்! அவர் பேசட்டும். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. என்னுடைய நோக்கம் எல்லாம் மக்களாகிய உங்களைப் பற்றிதான். வாக்களித்த உங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே சிந்தனை.
இந்த இரண்டு வாரங்களுக்குள் மூன்று முக்கியமான திட்டங்களைத் தொடங்கி வைத்திருக்கிறேன். உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், தாயுமானவர் திட்டம். இந்தத் திட்டங்களைப் பற்றி நான் அதிகம் விவரிக்கவே தேவையில்லை. ஏனென்றால், பயன்பெற்று வரக்கூடிய நீங்களே அந்தத் திட்டங்களுக்கு தூதராக மாறிவிட்டீர்கள்.
அரசுத்துறை சேவைகளில், பொதுமக்களுடைய அனைத்துக் கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருவது ‘உங்களுடன் ஸ்டாலின்!’ இதுவரை 3 ஆயிரத்து 561 முகாம்களில் நம்முடைய அரசு மேல் முழு நம்பிக்கையுடன் 3 இலட்சத்து 41 ஆயிரத்து 395 பேர் தங்களுடைய கோரிக்கை மனுக்களைக் கொடுத்திருக்கிறார்கள்.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில், 74 முகாம்கள் மூலமாக இதுவரை 92 ஆயிரத்து 841 பேர் பயனடைந்திருக்கிறார்கள். தாயுமானவர் திட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களைக் கண்டறிந்து அவர்கள் வீடுகளுக்கே நேரடியாக ரேசன் பொருட்கள் தரப்படுகிறது.
இப்படி 21 இலட்சம் குடும்பங்களுக்கு அரசே அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்று வழங்குகிறது. வயதானவர்கள், ரேசன் கடைக்கு வரத் தேவையில்லை. வரிசையில் நிற்கத் தேவையில்லை. பொருட்களை வீடுவரை கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டு செல்லத் தேவையில்லை. இவை எல்லாவற்றையும் அரசே செய்து தருகிறது. இதன் மூலமாக, அரசுக்கு கூடுதல் செலவாகும் என்றாலும், அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் செலவாக கருதவில்லை. அரசின் கடமையாகதான் நாங்கள் நினைக்கிறோம். வீட்டிற்கே பொருள் வந்து சேர்ந்ததும், அந்த முதியோர்கள் கொடுத்துவிட்டு வருகின்ற பேட்டிகளை எல்லாம் ஊடகங்களின் நான் பார்த்தேன்.
உணர்ச்சி பெருக்கோடு நா தழுதழுக்க அவர்கள் பேட்டி தருகிறார்கள். அந்த பேட்டிகளைப் பார்க்கும் போது, நானும் அதிகம் உணர்ச்சி வசப்படுகிறேன். நெகிழ்ந்து போகிறேன். நான் முதலமைச்சரானதின் நோக்கம் நிறைவேறிக் கொண்டிருப்பதை நினைத்து நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். மனநிறைவை அடைகிறேன். அடுத்து அமையப் போவதும் உங்களுடைய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி தான். திராவிட மாடல் 2.0 ஆட்சியில், இந்தியாவிலேயே அனைத்துத் துறையிலும் வளர்ந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.