கொழும்பு: இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை அப்புறப்படுத்தி, ஏலமிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலங்கை கடற்படையினரால் கடந்த 11 ஆண்டுகளில் சுமார் 500 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3,800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். மீனவர்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின்னர், மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளினாலும், சிறை தண்டனை மற்றும் அபராதம் செலுத்தியதாலும், தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் படகுகள் விடுவிக்கப்படவில்லை.
இதில் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இலங்கை நீதிமன்றங்கள், தமிழக மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 180 படகுகளை நாட்டுடைமையாக்கி உள்ளன. இவ்வாறு இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, அந்நாட்டு நீதிமன்றங்களினால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் தலைமன்னார், காங்கேசன்துறை, மயிலிட்டி ஆகிய மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மயிலிட்டி துறைமுகத்தில் நிற்கும் 123 தமிழக மீன்பிடி படகுகளில் 48 படகுகளின் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற உத்தரவுப்படி, 7 படகுகள் ராமேசுவரம் மீனவர்களால் எடுத்துவரப்பட உள்ளன. மேலும், அரசுடைமையாக்கப்பட்ட 68 படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க, செப்டம்பர் முதல் வாரம் மயிலிட்டி துறைமுகத்தை பார்வையிட உள்ள நிலையில், மயிலிட்டி துறைமுகத்தில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை அச்சுவேலி பகுதிக்கு கொண்டுசெல்வதற்காக ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் படகுகள் பிரித்து எடுத்து மரக்கட்டைகளாகவும், விறகுகளாக்கி ஏலமிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட விசைப்படகுகளுக்கு தலா ரூ.8 லட்சமும், நாட்டுப் படகுகளுக்கு தலா ரூ.2 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.