தனது அரசியல் வளர்ச்சிக்கு எதிராக 2 அமைச்சர்கள் தொல்லை தருவதாக காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான சந்திர பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று அவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “புதுச்சேரியில் கட் அவுட் வைக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. அதை மதிக்கிறோம். எனினும் சில சமயங்களில் கட்சியினர் கட் அவுட் வைத்து விடுகின்றனர். இந்நிலையில், கட் அவுட் வைத்தது தொடர்பாக ஒரு வாரம் முன்பு எனக்கு ஒரு சம்மன் வந்தது. விசாரித்தபோது, இதன் பின்னணியில் ஒரு அமைச்சர் உள்ளார் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து குறுகிய சிந்தனையோடு எனக்கு எதிராக செயல்படுகின்றனர். தனது கட்டுப்பாட்டில் இல்லை என்றால் ஒரு பெண்ணை எவ்வளவு டார்ச்சர் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். இது நாகரிகமான அரசியல் இல்லை. நான் எல்லோரையும் குறை சொல்ல விரும்பவில்லை. 2 அமைச்சர்கள் இதுபோல எனது அரசியல் வளர்ச்சிக்கு எதிராக தொல்லை கொடுத்து வருகின்றனர்.
எனது அப்பா ஸ்தானத்தில் உள்ள முதல்வர் ஒருவருக்காக மட்டுமே பொறுத்துக் கொண்டு, நான் பெயர் சொல்லாமல் இருக்கிறேன். எனக்கு டார்ச்சர் கொடுக்கப்படுவதை நான் அறிந்திருக்கிறேன் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவே இந்த வீடியோவை வெளியிடுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.