சென்னை: “இருமொழி கொள்கை தான் நமது உறுதியான கொள்கையாக இருக்கும். கல்வியில் முன்னணி மாநிலமாக இருக்கின்ற தமிழகத்தை மேலும் முன்னேற்றுவோம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (ஆக. 8) முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “பள்ளி மாணவர்கள், இளைஞர்களை பார்த்தாலே புதிய உற்சாகம் பிறந்து விடுகிறது. இந்த ஆண்டு பள்ளிக்கல்வி முடித்த 75% மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். ஐஐடியில் தமிழக மாணவர் சேர்க்கை ஒற்றை இலக்கத்தில் இருந்து இந்த ஆண்டு 27% ஆக உயர்ந்துள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் இந்த கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கல்விக்கொள்கை மூலமாக படித்து மனப்பாடம் செய்து கேள்வி கேட்கிற மாணவர்களை விட, சிந்தித்து கேள்வி கேட்கின்ற மாணவர்களை உருவாக்கவிருக்கிறோம். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலை வழங்க இருக்கிறோம். படிக்கிறவர்களாக மட்டுமல்ல, படைப்பாற்றல் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்.
கல்வியுடன் உடற்பயிற்சியும் இணைக்கப்படும். தாய் மொழி, அதாவது தமிழ் மொழி நம் அடையாளமாக பெருமிதமாக இருக்கும். தமிழும் ஆங்கிலமும் தான் உறுதியான கொள்கை. இருமொழி கொள்கை தான் நமது உறுதியான கொள்கையாக இருக்கும். பசுமை பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் புதிய மாதிரி வெற்றிப் பள்ளிகள் அமைக்கப்படும். உண்டு உறைவிட பள்ளி உருவாக்கப்படும். கல்வி தொலைக்காட்சியும், மணற்கேணி செயலியும் ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை என்ற நிலையை உருவாக்கும். அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்.
மதிப்பெண்கள் நோக்கி அல்லாமல் மதிப்பீடுகளை நோக்கி பயணம் அமையும். நான் முதல்வன் திட்டம் வேலைக்கு வழிகாட்டியாக மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும். இவ்வாறு கல்வித்துறையில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வர இருக்கிறோம். கல்வி எல்லோருக்குமானது, அங்கு பாடுபடு இருக்காது. அங்கு கல்வி பாகுபாட்டை நீக்குவோம்.
நீங்கள் விரும்புகின்ற கல்வியை பெறுவதற்கான வாசலை நமது கல்விக் கொள்கை திறந்து வைக்கும். சமத்துவ கல்வியை உருவாக்குவோம். அறிவு கல்வியை அறிமுகம் செய்வோம், அது பகுத்தறிவு கல்வியாக இருக்கும். மாணவர்கள் உலக அளவில் போட்டி போட வெற்றி பெற இந்த மாநில கொள்கை உதவிகரமாக இருக்கும். கல்வியில் முன்னணி மாநிலமாக இருக்கின்ற தமிழகத்தை மேலும் முன்னேற்றுவோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.