விருதுநகர்: “அரசு ஒரு மாதத்துக்குள் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலை மீண்டும் இருக்கன்குடி ஊராட்சியில் சேர்க்காவிட்டால் மக்களைத் திரட்டி தென் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒரு பகுதி அருகே உள்ள நத்தத்துப்பட்டி ஊராட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை மீண்டும் மறு ஆய்வு செய்து மாரியம்மன் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மீண்டும் இருக்கன்குடி ஊராட்சியில் இணைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பட்டத்தில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தலைமை வகித்து தொடங்கிவைத்தார். அப்போது, மீண்டும் மாரியம்மன் கோயிலை இருக்கன்குடி ஊராட்சியில் இணைக்கவும், இதுதொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக்கோரியும், அறங்காவலர் குழுவை மாற்றி அமைக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து, கிருஷ்ணசாமி அளித்த பேட்டியில், “மாரியம்மன் கோயில் காலம் காலமாக இருக்கன்குடி ஊராட்சியில் இருந்து வருகிறது. கடந்த 1995-ம் ஆண்டு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வே எண்ணை மாற்றியுள்ளார். அதனால், மாரியம்மன் கோயிலும் அதைச் சுற்றியுள்ள ஒரு பகுதி இடமும் சம்பந்தமே இல்லாத நத்தத்துப்பட்டி ஊராட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதை சரிசெய்யக்கோரி கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். நீதிமன்றமும் 8 வார காலத்திற்குள் மாவட்ட ஆட்சியர் நேரில் கள ஆய்வு செய்து இதை சரிசெய்ய வேண்டும் என உத்தரவிட்டும் இதுவரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்சினை தொடர்பாக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு மாதத்திற்குள் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தென் தமிழகம் முழுவதும் அனைத்து சமுதாய மக்களையும் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.” என்றார். ஆர்ப்பாட்டத்தில், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம், மாவட்டச் செயலாளர் குணா மற்றும் நிர்வாகிகள், இருக்கன்குடி கிராம மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.