சென்னை: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஜூலை 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழா மற்றும் பெரம்பலூர், தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வேகமாக தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜகவும் உறுதியாக உள்ளது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார். அதன்பிறகு, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் வந்தார். அப்போது, கூட்டணி கட்சிகளுடன் பாஜக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதை தொடர்ந்து, கடந்த மாதம் மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமித் ஷா பங்கேற்று பல்வேறு அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து, அடிக்கடி தமிழகம் வருவேன் என்றும் அமித் ஷா கூறியிருந்தார். அதன்படி, கடந்த 8-ம் தேதி அமித் ஷா சென்னை வர இருப்பதாகவும், அப்போது கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், அமித் ஷாவின் சென்னை வருகை திடீரென ரத்தானது. பாஜக தேசிய தலைமை மாற்றம் தொடர்பான பணிகளில் அமித் ஷா முழு கவனம் செலுத்திவருவதால், கட்சியின் தேசிய தலைமை நியமனத்துக்கு பிறகு, அவர் சென்னைக்கு வரக்கூடும் என்றும், அதற்கு முன்பாக பிரதமர் மோடி தமிழகம் வர வாய்ப்பு உள்ளதாகவும் பாஜக வட்டாரத்தில் கூறப்பட்டது.
இதற்கிடையே, சமீபத்தில் இந்து முன்னணி சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு வெற்றி பெற்றதாக பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அதேபோன்ற ஆன்மிக நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவை சிறப்பாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரசோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது பிரகதீஸ்வரர் கோயில். கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங்கையில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டு கும்பாபிஷேகம் நடத்திய பெருமை வாய்ந்தது இந்த கோயில். இங்கு ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை தினத்தை, தமிழக அரசு கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு, கோயில் வளாகத்தில் கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடைபெறும்.
முதல்வரும் பங்கேற்பு? – இந்நிலையில், ராஜேந்திரசோழன் பிறந்தநாளை இந்த ஆண்டில் மத்திய கலாச்சார துறை சார்பில் 5 நாள் விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஜூலை 23-ம் தேதி, விழாவை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தொடங்கிவைக்கிறார். நிறைவு நாளான ஜூலை 27-ம் தேதி நடைபெறும் திருவாசகம் மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும், அவர் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் பொறிக்கப்பட்ட நினைவு நாணயத்தை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையொட்டி, வரும் 26-ம் தேதி டெல்லியில் இருந்து கேரளாசெல்லும் பிரதமர் மோடி, திருவனந்தபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அன்று இரவு திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு வருவதாக கூறப்படுகிறது. 27-ம் தேதி அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தொடர்ந்து, 28-ம் தேதி பெரம்பலூர், தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தகவல்வெளியாகி உள்ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு, பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. விழா ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.