சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித் தடத்தில் ஒரு பகுதியாக, பனகல் பூங்கா – கோடம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி நிறைவடைந்தது. இப்பணியில் ஈடுபட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரமான “பீகாக்” கோடம்பாக்கம் நிலையத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது.
சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித் தடம் (26.1 கி.மீ.) முக்கிய வழித்தடமாக உள்ளது. இத்தடத்தில், கலங்கரை விளக்கம் – கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப் பாதையாகவும் அமைகிறது.
தற்போது, பல்வேறு இடங்களில் சுரங்கப் பாதை, உயர்மட்டப் பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரையிலான 10.03 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை பணி நடைபெறுகிறது. இதன் கட்டுமானப் பணிகளை ஐடிடி சிமென்டேஷன் இந்தியா நிறுவனம் மேற்கொள்கிறது. இதற்காக, 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பனகல் பூங்கா – கோடம்பாக்கம் இடையே 2,047 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணியில், பீகாக் (மயில்), பெலிகான் (நாரை) என பெயரிடப்பட்டுள்ள, 2 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரங்கள் அடுத்தடுத்து கோடம்பாக்கம் நிலையத்தை நெருங்கி வந்தன.
இந்நிலையில், பனகல்பூங்கா – கோடம்பாக்கம் நிலையம் வரை, பீகாக் என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் நேற்று பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்த இயந்திரம், ஆற்காடு சாலையில் மீனாட்சி கல்லூரிக்கு அருகில் கோடம்பாக்கம் நிலையத்தை நேற்று வந்தடைந்தது.
இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், ஐடிடி சிமென்டேஷன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயந்த பாசு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), எஸ்.அசோக் குமார் (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), தலைமை ஆலோசகர் ராஜீவ் கே.ஸ்ரீவஸ்தவா (சுற்றுச்சூழல்), பொது மேலாளர் ஆர். ரங்கநாதன் (கட்டுமானம்) உள்பட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்டத்தில் பனகல் பூங்கா மற்றும் கோடம்பாக்கம் இடையிலான இந்த சுரங்கப் பாதை பிரிவு மிகவும் நீளமான பிரிவாகும். இதில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் பீகாக் (மயில்) 190 கட்டிடங்கள் வழியாக செல்ல வேண்டியிருந்தது. அவற்றில், பெரும்பாலும் குடியிருப்பு கட்டிடங்கள். அவற்றில், 50-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பழைய கட்டிடங்கள்.
மேலும், இந்த சுரங்கப் பாதை இரண்டு தேவாலயங்கள் வழியாகவும், கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு கீழேயும் சென்றது. சவால்கள் இருந்த போதிலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் சுரங்கப் பாதை பணியை நிறைவு செய்ததுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.