பரமக்குடி: பரமக்குடியில் ரூ.3 கோடியில் கட்டடப்பட்டு வரும் இமானுவேல் சேகரன் மணிமண்டபம் இன்னும் 2 மாதத்தில் திறக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 68-வது நினைவு தின விழா அவரது நினைவிடத்தில் இன்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், பி.மூர்த்தி, ராஜகண்ணப்பன், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை) ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் துணை முதல்வர் உதயநிதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக பாடுபட்ட இமானுவேல் சேகரன் 68-வது நினைவு நாளில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி அமைச்சர்களுடன் மரியாதை செலுத்தினோம். சமூக நீதிக்காக போராடிய இமானுவேல் சேகரனுக்கு அவரது குடும்பத்தினர், அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
பரமக்குடி நகராட்சி பகுதியில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. இறுதிகட்டமாக அவரது உருவச்சிலை அமைக்கும் பணி மட்டும் நடைபெறவுள்ளது. விரைவில் அப்பணிகள் நிறைவடைந்து இன்னும் 2 மாதத்தில் திறந்து வைக்கப்படும்.
இதன் மூலம் அவரது சமூக நீதி, தியாகம் வருங்கால தலைமுறையினருக்கும் தெரியவரும், என்றார். அப்போது, பாஜக, அதிமுக, பாமக நீக்கம் குறித்து கேள்வி கேட்டதற்கு, நினைவுநாளில் மரியாதை செலுத்த வந்துள்ளோம். அரசியல் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன், என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.