பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதையொட்டி 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி அங்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதலில் இமானுவேல் சேகரன் குடும்பத்தினரான அவரது மகள் சுந்தரி பிரபாராணி, பேரன்கள் சக்கரவர்த்தி, ஆரோக்கிய கோமன், ஜீவன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

உருவப்படத்துக்கு மலர்தூவி
மரியாதை செலுத்தியஅதிமுக
பொதுச் செயலாளர் பழனிசாமி.
அதைத் தொடர்ந்து தேவேந்திர பண்பாட்டுக் கழகம் சார்பில் அதன் தலைவர் சக்கரவர்த்தி, செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வராணி மற்றும் உறுப்பினர்கள் மரியாதை செய்தனர். இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செல்லூர் கிராம மக்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கேஆர்.பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, கயல்விழி செல்வராஜ், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா என்ற முத்துராம லிங்கம், முருகேசன், தமிழரசி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மணிமண்டபம் விரைவில் திறப்பு: அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, ‘‘சமூக நீதிக்காகப் போராடிய இமானுவேல் சேகரனுக்கு, அவரது குடும்பத்தினர், அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாதங்களில் மணிமண்டபம் திறக்கப்படும்’’ என்றார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அதிமுக நிர்வாகி ராஜலெட்சுமி ஆகியோர் தலைமையில் மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாநில மகளிரணிச் செயலாளர் கீர்த்திகா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மேலும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர், நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி,தினகரன், தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பிரிஸில்லா பாண்டியன், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு சார்பில் (ஓபிஎஸ் அணி) எம்.பி. தர்மர், உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ அய்யப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, மதிமுக சார்பில் சதன் திருமலைக் குமார், புதூர் பூமிநாதன் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் வி.கே. சுரேஷ், பாமக பொருளாளர் சையது மன்சூர் உசேன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
அதேபோல், புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி, தேவேந்திரகுல வேளாளர் சட்ட பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.பாஸ்கர் மதுரம் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி சந்தீஷ் தலைமையில் 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.