தூத்துக்குடி: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. கடைசி நேரத்தில்கூட கூட்டணிக்கு கட்சிகள் வரலாம். இப்போது இருக்கின்ற கூட்டணி கூட பிரியலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ கூறினார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தாளமுத்துநகர் அருகே அதிமுக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கடம்பூர் ராஜு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக முதன்முதலில் தேர்தல் களத்துக்கு வந்த இயக்கம் அதிமுகதான். கூட்டணியைப் பற்றி கவலைப்படும் கட்சிகளின் மத்தியில், மக்களை நம்பி தேர்தல் களத்துக்கு வந்தவர் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. இதுவரை 154 தொகுதிகளில் பிரச்சாரத்தை நிறைவு செய்து உள்ளார்.
கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில்தான் அமையும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. கடைசி நேரத்தில்கூட கூட்டணிக்கு கட்சிகள் வரலாம். இப்போது இருக்கின்ற கூட்டணிகூட பிரியலாம். ஆனால், அதிமுக மக்களை நம்பிகளத்துக்கு வந்த இயக்கம். மக்கள் மீது எங்களுக்கும், எங்கள் மீது மக்களுக்கும் நம்பிக்கை உள்ளது. ஏற்கெனவே நல்லாட்சி கொடுத்த பழனிசாமிதான் அடுத்த முதல்வர் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.
யார் எதிர்க்கட்சியாக வருவது என்பது தொடர்பாகத்தான் திமுக – தவெக இடையே போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியை திமுக விழுங்கப் பார்க்கிறது என்று பழனிசாமி குற்றம் சாட்டினார். அதை நிரூபிக்கும் வகையில், காங்கிரஸ் மாவட்ட மகளிரணித் தலைவியை திமுகவில் சேர்த்துள்ளனர். காங்கிரஸ்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
திமுக கூட்டணி உடைந்து… அதிமுக கூட்டணி உடையும் என்று கூறினீர்களா என கடம்பூர் ராஜுவிடம் கேட்டபோது, “திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்டு நெருக்கடி கொடுக்கின்றன. இதனால், திமுக கூட்டணி உடைந்து, அதில் உள்ள கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும் என்றுதான் பேசினேன்” என்றார்.