காரைக்குடி: பழனிசாமி முதல்வரான பிறகு அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியையே சந்தித்துள்ளது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவினர் ஒவ்வொரு அமைப்பையும் காவி மயமாக்க முயற்சித்து வருகின்றனர். இந்தி, இந்துத்துவாவை திணிக்க வேண்டும் என்பது தான் அவர்களது எண்ணம். அது தமிழகத்தில் எடுபடாது. தமிழகத்தில் 2026-ம் ஆண்டு தேர்தலில் எத்தனை முனை போட்டியாக இருந்தாலும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி வெற்றி பெறும்.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்கு வங்கி வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால் சித்தாந்த பற்றுள்ள கம்யூ., கட்சி தமிழகத்தில் உயிரோட்டமாக தான் உள்ளது. தேர்தலை மையமாக வைத்து இயங்கும் இயக்கமாக கம்யூ. கிடையாது. மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் இயக்கமாக தான் உள்ளது.
பழனிசாமி தேர்தலில் முதல்வர் பதவிக்கு நின்று வெற்றி பெற்று முதல்வர் ஆகவில்லை. சரித்திர விபத்தால் முதல்வரானவர். அவர் முதல்வரான பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தகளிலும் அதிமுக தோல்வியையே சந்தித்துள்ளது. சீமான் உணர்ச்சிவச அரசியல் செய்கிறார். ஆடு, மாடுகளை மதிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. அதற்காக அவற்றை திட்டுவோரை தடுக்க சட்டமா கொண்டு வர முடியும்.
சுதந்திர நாட்டில் ஓபிஎஸ் சுற்றுபயணம் செய்ய தடையில்லை. நம் ஊரு பக்கம் வந்து செட்டிநாடு சமையல் சாப்பிட்டுவிட்டு செல்லட்டும்.
தேர்தல் ஆணையம் உள்ள பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. சிறுபான்மையினருக்கு வாக்கு உரிமை தரக்கூடாது என முயற்சி இருக்குமோ? என்று எனக்கு அச்சம் உள்ளது.
கொடநாடு உள்ளிட்ட எந்த வழக்காக இருந்தாலும் விரைவில் விசாரித்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டியது காவல்துறை பொறுப்பு. மாநகராட்சி ஒத்துழைப்பதில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது. அதைவிட பெரிய வருத்தம் திமுக கவுன்சிலர்களுக்கே இருக்கிறது.
காவல்துறை விசாரணையை, மக்களை அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். அதற்கு அனைத்து காவல்துறையினருக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.