மதுரை: “கூட்டணியில் இருக்கிறோம். ‘டம்மி வாய்ஸ்’ ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
விருதுநகர் செல்வதற்காக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “பாஸ்டாக்குக்கு தமிழக போக்குவரத்து கழகம் பாக்கி வைத்துள்ளது. டீசல், பெட்ரோல் போடுவதிலேயே கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். அரசு போக்குவரத்து மானியம் கொடுத்து, அதை இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். முதல்வர் செய்யவேண்டிய வேலையை செய்யாததால் போக்குவரத்துக் கழகம் பாதிக்கப்படுகிறது.
தமிழ்நாடு இங்கேதான் இருக்கிறது. எதற்கு ஓரணியில் பயணம் செய்யவேண்டும். எப்போது அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததோ, அப்போது இருந்தே முதல்வருக்கு ஜுரம் வந்துவிட்டது. தோல்வி பயமும் வந்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்களும் அதே மாதிரி பேசுகிறார்கள்.
அம்பாசமுத்திரத்தில் 17 வயது சிறுமியை போதை பழக்கமுடையவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். வள்ளியூரில் 17 பவுன் நகைக்காக மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். தினசரி இதுபோன்ற சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, போதைப் பொருள் நடமாட்டம் அதிகரிக்கிறது. இதை மறைக்க முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் ஊர், ஊராக செல்கிறார். இதில் எந்த நன்மையும் இல்லை.
இன்றைக்கு மக்கள் விரோத ஆட்சியாக திமுக உள்ளது. நிச்சயமாக 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். பாஜகவின் ‘டம்மி வாய்ஸ்’ தான் எடப்பாடி பழனிசாமி என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அவருக்கு இப்போது என்ன பேசுவது என்றே தெரியவில்லை. முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசவேண்டிய கருத்தைதான் பேசியிருக்கிறார். கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். டம்மி வாய்ஸாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அண்ணன் வைகோ எப்போதும் அதிகம் கோபப்படக் கூடியவர். கூட்டத்தில் இருக்கும்போது சத்தம் போடுவதை எல்லா இடங்களிலும் செய்கிறார். சாத்தூர் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டு இருக்கின்றனர். உண்மையில் அது கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது.
முருக பக்தர்கள் மாநாட்டை அமைச்சர் சேகர்பாபு சங்கிகள் கூட்டம் என்கிறார். முருகர் மாநாடு நடப்பதற்கு முன்பாகவே 6 நாட்களில் மட்டும் இரண்டரை லட்சம் பேர் வந்திருந்தனர். ஆறாவது நாள் 5 லட்சம் பேர் வந்தனர். அவர்கள் கட்சிக் கூட்டம் நடத்தினால் டாஸ்மாக்கில் தான் அதிக கூட்டம் இருக்கும். ஆனால், இக்கூட்டத்துக்கு வந்தவர்கள் கூட்டம் முடிந்தவுடன் அமைதியாக அமர்ந்திருந்த சேரை எடுத்து அடுக்கி வைத்து விட்டு, கீழே கிடந்த பாட்டிலை சுத்தம் செய்து விட்டு சென்றனர். இதுவே உண்மையான முருக பக்தர்கள் மாநாடு” என்றார்.
மதுரை மாநகராட்சி ஊழல் குறித்த கேள்விக்கு பாஜக மாநில செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் பதிலளிக்கும்போது, “இந்த மாநகராட்சி மேயரை மாற்றுவார்கள் என யூகம் உள்ளது. நாளை மறுநாள் பாஜக சார்பில் 3 மாவட்டங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. திமுக பதவி விலக வலியுறுத்துவோம்” என்றார்.