பிரதமர் மோடியின் இரண்டு நாள் தமிழக பயணம் என்பது அரசு நிகழ்வுகளையொட்டியது என்றாலும் கூட, இடையிடையே அரசியல் தருணங்களையும் கவனிக்க முடிந்தது. முதல் நாள் இரவு, தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்து, 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.
மறுநாள், அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயம், திருவாசக தொகுப்பு நூலை அவர் வெளியிட்டார்.
இந்த நிகழ்வுகளுக்காக தமிழகம் வந்த பிரதமர் மோடியை, திருச்சி விமான நிலையத்தில் வரவேற்றவர்களில் முக்கியமானவர், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்புக்குப் பின், பிரதமர் மோடி உடனான எடப்பாடி பழனிசாமியின் முதல் சந்திப்பு இது. ஆனால், தனியாக ஆலோசனை ஏதும் இல்லாத வெறும் ‘ஹாய்’ சொல்லும் சந்திப்பாகவே இது அமைந்துவிட்டது.
‘விமான நிலைய விஐபி காத்திருப்பு அறையில் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் தனியாக சந்தித்துப் பேசுவார் அல்லது அவர் தங்கியுள்ள நட்சத்திர விடுதியில் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார்’ என்று திருச்சி அதிமுக நிர்வாகிகள் கூறிக்கொண்டே இருந்தனர். ஆனால், கடைசி வரை பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பது கவனிக்க வைத்தது.
‘தமிழகத்துக்கு நிதிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது’ என்பதே தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் முதன்மைக் குற்றச்சாட்டு. இதற்கு பதிலளிக்கும் வகையில், தூத்துக்குடி நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, ‘தமிழகத்தின் வளர்ச்சி, மேம்பட்ட தமிழகம் என்ற கனவுக்கு உறுதிபூண்டுள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்திருக்கிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தமிழகத்துக்கு கிடைத்த நிதியை காட்டிலும் மூன்று மடங்கு கூடுதல் நிதியை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கியுள்ளது’ என்று குறிப்பிட்டது, தலைப்புச் செய்திகள் ஆகின.
முன்னதாக, தூத்துக்குடி விழா பந்தலில் திமுக, பாஜக கட்சி தொண்டர்கள் அமருவதற்கு ஏதுவாக தலா ஆறாயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாலை 4 மணி முதல் கட்சியினர், பொதுமக்கள் விழா பந்தலுக்கு வந்தனர். அப்போது முதலே திமுகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தியும், பாஜகவினர் பிரதமர் மோடியை வாழ்த்தியும் கோஷமிட்டவாறு இருந்தனர்.
பிரதமர் 7.50 மணிக்கு விழா மேடைக்கு வந்தார். 8.15 மணிக்கு அவர் பேசத் தொடங்கினார். அப்போதும் கூட, இரு கட்சியினரும் கூச்சலிட்டவாறு இருந்தனர். நேரம் செல்லச் செல்ல கூச்சல் அதிகமானது. மேலும், இரு கட்சியினரும் தங்களது கட்சி வண்ணத்துடன் கூடிய துண்டுகளை தலைக்கு மேல் தூக்கி கைகளால் சுழற்றியவாறு கோஷமிட்டபடி இருந்தனர். இதனால் பிரதமர் மோடி பேசுவதை யாராலும் சரியாக கேட்க முடியவில்லை.
திடீரென இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக இந்த களேபரம் நடந்தது. போலீஸார் இரு கட்சியினரையும் சமாதானப்படுத்த முயன்றும் பயனளிக்கவில்லை. இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது தனிச் செய்தி.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், பிரதமர் மோடி 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ நடத்தியதில் உத்வேகம் அடைந்துள்ளனர், தமிழக பாஜகவினர்.
ஓட்டலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11.10 மணியளவில் திருச்சி விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். மேஜர் சரவணன் சாலை, பாரதிதாசன் சாலை, தலைமை அஞ்சல் நிலைய ரவுண்டானா, குட்ஷெட் மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம் வழியாக சென்று 11.31 மணிக்கு விமான நிலையம் சென்றடைந்தார்.
வழிநெடுகிலும் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையின் இருபுறமும் பாஜக, அதிமுக கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் திரண்டு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். காரில் இருந்தவாறு அவர்களை பார்த்து பிரதமர் கையசைத்தார்.
இதேபோல, கங்கைகொண்ட சோழபுரம் பொன்னேரி ஏரியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடு தளத்தில் இருந்து, விழா நடைபெற்ற கோயில் வளாகம் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு பிரதமர் மோடி ‘ரோடு ஷோ’ சென்றார். அங்கும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து, கோயிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. இளையராஜா இசைத்த ‘ஓம் சிவோஹம்’ பாடலை பிரதமர் மோடி ரசித்து மகிழ்ந்தார். ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயம், திருவாசக தொகுப்பு நூலை வெளியிட்டு, ‘வணக்கம் சோழ மண்டலம்’ என்று தொடங்கிய பிரதமர் மோடி, திருவாசகத்தை மேற்கோள் காட்டி தமிழில் பேச்சை தொடங்கினார்.
ராஜராஜ சோழன், அவரது மகன் ராஜேந்திர சோழனின் ஆட்சிப் பெருமைகளைப் பேசி, அவற்றை ‘ஆபரேஷன் சிந்தூர்’ உள்ளிட்ட தற்போதைய மத்திய அரசின் அணுகுமுறைகளோடு ஒப்பிட்டும் பல கருத்துகளை முன்வைத்தார். இளையராஜா தொடங்கி செஞ்சிக் கோட்டை வரை, தமிழர்களை கவனக்கும் அம்சங்களை தன் உரையில் ஆங்காங்கே குறிப்பிட்டு கைத்தட்டலை பெற்றார்.
குறிப்பாக, ‘மாமன்னர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும்’ என்று பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு, அரசியல் ரீதியிலும் கவனம் பெற்றுள்ளது.
இந்த விழாவில், விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் கொடுத்த ‘என்ட்ரி’தான். மத்திய பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சித்து வரும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களில் முதன்மையானவர் என்பதால்தான் இந்த வியப்புக்கும் சலசலப்புக்கும் காரணம்.
பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பொன்னேரியில் இருந்து கோயில் வளாகம் வரை சாலையின் இருபுறமும் பாஜக, அதிமுக கொடிகளுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தது முன்கூட்டியே கவனிக்கப்பட்டது.
விழா மேடையில் பிரதமர் மோடி நடுவே அமர்ந்திருக்க, அவருக்கு வலப்பக்கம் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோரும், இடப்பக்கம் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் இடையே அமர்ந்திருந்தார் திருமாவளவன் எம்.பி.
இந்த விழாவில் பங்கேற்றது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், “நம் வீட்டு நிகழ்ச்சிக்கு பிரதமர் வருகிறார். அவரை வரவேற்க வேண்டியது தமிழர்களின் மரபு. அந்த வகையில்தான், தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், இந்த மண்ணின் மைந்தன் – மண்ணுக்கு உரியவன் என்ற முறையிலும் அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
எனினும், பிரதமர் மோடி மேடையில் திருமாவளவன் இருந்ததை முன்வைத்து சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினரால் அரசியல் ரீதியில் விமர்சனக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
விழா முடிந்த பிறகு, புகைப்படங்களுடன் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி கங்கைகொண்ட சோழபுரத்தில், ஒன்றிய அரசின் சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் நானும் பங்கேற்றேன்!” என்று குறிப்பிட்டுள்ளதும் கவனிக்க வைத்தது.