கூட்டணிக்கான எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை சட்டென மறுத்திருக்கிறது விஜய், சீமான் தரப்பு. திமுகவுக்கு எதிராக பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்க முயலும் அதிமுகவின் முயற்சிக்கு முதற்கட்ட பின்னடைவாக இது அமைந்துள்ளது. தவெக, நாதகவை வழிக்கு கொண்டுவர இபிஎஸ்சின் அடுத்தக்கட்ட முன்னெடுப்பு என்னவாக இருக்கும் என பார்ப்போம்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியதிலிருந்து, சந்தித்த தேர்தல்கள் அனைத்திலும் பின்னடைவை சந்தித்து வருகிறது அதிமுக. அந்த வகையில் 2026 தேர்தலில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய நெருக்கடியோடு களமிறங்கியிருக்கிறார் இபிஎஸ். ஆனால், அவரின் கூட்டணியில் இப்போதுள்ள கட்சிகள் பாஜகவும், தமாகாவும்தான். எனவே, இன்னும் சில கட்சிகளை உள்ளே கொண்டுவந்து கூட்டணியை வலுப்படுத்த தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு முறையும், ஆளும் கட்சிக்கு எதிராக அமைக்கப்படும் வலுவான கூட்டணியே ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலியிருக்கிறது. 1967-ல் காங்கிரஸுக்கு எதிராக ராஜாஜியின் சுதந்திரா கட்சி, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என ஒரு கதம்ப கூட்டணியை அமைத்து ஆட்சி மாற்றம் கண்டார் அண்ணா. பின்னர் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என ஜனரஞ்சக தலைவர்கள்கூட ஒவ்வொரு தேர்தலிலும் பிரம்மாண்ட கூட்டணியை உருவாக்கியே ஆட்சி மாற்றத்தை உருவாக்கினார்கள். அதே பாணியில்தான் 2026 தேர்தலுக்காக பலமான கூட்டணியை உருவாக்க நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
திமுக இப்போது பலமான கூட்டணியோடு உள்ளது. அதன் உட்கட்சியிலும் குழப்பமில்லாத சூழல் நிலவுகிறது. எனவே, 2026 தேர்தலில் வெற்றி தங்கள் வசம்தான் என தீர்க்கமாக நம்புகிறார் மு.க.ஸ்டாலின். திமுகவின் நம்பிக்கைக்கு மற்றொரு காரணம், திமுகவை எதிர்க்கும் வாக்குகள் மூன்றாக பிளவுபடுவதுதான். திமுகவுக்கு நம்பிக்கை கொடுக்கும் இந்த விஷயம்தான், அதிமுகவுக்கு அச்சத்தை விதைத்துள்ளது.
திமுகவுக்கு எதிரான வாக்குகள் மூன்றாக பிளவுபடுவதை தவிர்க்க, இப்போதுள்ள நான்கு முனை போட்டி எனும் சூழலை, இருமுனை போட்டியாக மாற்ற இபிஎஸ் விரும்புகிறார். அதன் தொடர்ச்சியாகவே, தவெக, நாதகவுக்கு கூட்டணி அழைப்பை விடுத்தார் அவர். ஆனால் பொட்டில் அடித்தாற்போல ‘விஜய்தான் முதல்வர் வேட்பாளர், இதனை ஏற்போர் எங்களோடு சேருங்கள்’ சொல்லியுள்ளது தவெக தரப்பு. ‘தீமைக்கு மாற்று தீமை கிடையாது’ என அதிமுகவின் அழைப்பை எடுத்த எடுப்பில் புறந்தள்ளியுள்ளார் சீமான்.
தேர்தல் நெருக்கத்தில் பார்க்கலாம் அல்லது பொதுக்குழு, செயற்குழு முடிவு செய்யும் என்றுகூட நாசுக்காக சொல்லாமல், தடாலடியாக அதிமுகவின் அழைப்பை இவர்கள் துண்டிக்க காரணம், பாஜகதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
‘பாசிச பாஜகவோடு கூட்டணி இல்லை என்கிறார் விஜய், பாஜக மனிதகுல எதிரி என்கிறார் சீமான். அப்படி இருக்கையில், பாஜகவை பக்கத்தில் வைத்துக்கொண்டு எந்த நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி, அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் என்பதே தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இருக்கும்வரை இவர்கள் இருவரும் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இல்லை’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
பாஜகவை கூட்டணிக்குள் வைத்துக்கொண்டு அதிகபட்சமாக பாமக, தேமுதிக, புதிய தமிழகம், அமமுக, ஓபிஎஸ் அணி போன்ற கட்சிகளை மட்டுமே உள்ளே கொண்டுவரலாம். இன்னும், கொஞ்சம் முயற்சி செய்தால் ஒருவேளை மதிமுக வரலாம். மற்றபடி, எந்த கட்சியும் பாஜக இருக்கும் கூட்டணிக்குள் செல்ல வாய்ப்பு இல்லை.
ஒருவேளை பாஜக இல்லாத பட்சத்தில் விஜய், சீமான், பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளை வைத்து ஓர் அணியை அதிமுக உருவாக்கலாம். அந்த எல்லை வரை எடப்பாடி பழனிசாமியை பாஜக அனுமதிக்குமா எனத் தெரியவில்லை.
திமுக, பாஜகவோடு கூட்டணி இல்லை என சொல்லிவிட்டது தவெக. கூட்டணியே இல்லை சொல்லி தனித்து 150-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை அறிவித்துவிட்டது நாதக. அப்படி இருக்கையில் பாஜகவும் வேண்டும், தவெக – நாதகவும் வேண்டும் என்று இபிஎஸ் நினைப்பது தற்போதைய சலசலப்புகளுக்கு உதவுமே தவிர, உண்மையாக மாறுவது கடினம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இதையெல்லாம் தாண்டி, பாஜகவை கூடவே வைத்துக்கொண்டு தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவருவது வானத்தை வில்லாய் வளைப்பதற்கு சமம். அத்தகைய மாயாஜாலங்களை எடப்பாடி பழனிசாமியால் செய்ய முடியுமா எனப் பார்ப்போம்