காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள ஆதார் மையத்தில் ஆதார் அட்டையில் திருத்தம், கை ரேகை அப்டேட் செய்வது, புதிய ஆதார் அட்டை எடுப்பது என பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்களில் 40 பேருக்கு மட்டும் டோக்கன் விநியோகித்துவிட்டு மற்றவர்களை திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பொதுமக்கள், சிறுவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்துக்குள்ளேயே ஆதார் மையம் இயங்கி வருகிறது. இந்த ஆதார் மையத்துக்கு காலை 9 மணிக்கே பொதுமக்கள் வந்துவிடுகின்றனர். கைக் குழந்தைகளுடன் வருவோர், முதியோர், கர்ப்பிணிகள் என பலர் சுமார் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
பின்னர் 9.45 மணி அளவில் (ஒவ்வொரு நாளும் இந்த நேர அளவு மாறும்) அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. சுமார் 40 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கும் ஊழியர்கள் மற்றவர்களை வட்டாட்சியர் அலுவலகம் செல்லுங்கள், குறிப்பிட்ட வங்கிகளின் பெயரைச் சொல்லி அந்த வங்கிகளுக்குச் செல்லுங்கள் என திருப்பி அனுப்புகின்றனர்.
கைகுழந்தையுடனும், சிறுவர்களுடனும் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் என பலரும் செய்வதறியாமல் விழிக்கின்றனர். இவ்வாறு அலைக்கழிக்கப்படுவதால் பலர் அதிருப்பதியும் அடைகின்றனர். பள்ளிகளுக்கு விடுப்பு எடுத்துவிட்டு மாணவர்கள் தங்களின் ஆதார் அட்டையை அப்டேட் செய்வதற்கும், கைரேகை வைப்பதற்கும் வருகின்றனர். ஆனால் ஆதார் மையத்தில் உரிய சேவை அளிக்க முடியாத நிலையில் மாணவர்களும் அலைக்கழிக்கப்படுவதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் கூறுகையில் 40 பேருக்கு தான் டோக்கன் வழங்குகின்றனர். வரிசையில் காத்திருக்கும் மக்களை ஒரு மணி நேரம் கழித்து இங்கு செல், அங்கு செல் என்று அலைக்கழிக்கின்றனர். நான் இரு நாள்களாக அலைந்துவிட்டு தற்போது 3-வது நாளாக இங்கு வந்துள்ளேன்.
ஊழியர்கள் வரும் நேரம் ஒவ்வொரு நாளும் மாறுபடுகிறது. இதனால் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இவர்கள் கூறும் வேறு இடங்களுக்குச் சென்றாலும் அங்கும் நாளைக்கு வாருங்கள் என்று திருப்பி அனுப்புகின்றனர். இந்த சேவை மையத்துக்கு வரும் மக்களுக்கு உரிய சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷிடம் கேட்டபோது ஆதார் மையத்துக்கு வரும் மக்களுக்கு உரிய சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.