சென்னை: இசைத்துறையில், ஆர்வத்துடன் சிறந்த இசையைப் படைக்கின்ற இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கின்ற விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில், இனி ஆண்டுதோறும் ‘இசைஞானி இளையராஜா’ பெயரில் விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனையொட்டி இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ““ராஜா… ராஜாதி ராஜன் இந்த ராஜா… நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நீ ராஜா…!” இசை எனும் தேனை உலகத்துக்கே தரும் இந்தத் தேனிக்காரரை பாராட்ட, புகழ நாம் எல்லோரும் இங்கே கூடியிருக்கிறோம்!
நம்முடைய இசைஞானி, கலைத்தாய்க்கு மட்டும் சொந்தமானவர் இல்லை. தமிழ்த்தாய்க்கும் சொந்தமானவர்! அதனால்தான், தமிழ்நாடு அரசு சார்பில், இந்தப் பாராட்டு விழாவை, அவரைக் கொண்டாடும் விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம்!
பாராட்டும், புகழும் ராஜா அவர்களுக்கு புதிதா? கிடையாது. நிச்சயமாக சொல்கிறேன். இசைஞானியை பாராட்டுவதால் நாம் தான் பெருமை அடைகிறோம்!
இசைஞானி இளையராஜா, தனது திரையுலகப் பயணத்தை தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிறது! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய இதயங்களை ஆளத்தொடங்கி, ‘அரை நூற்றாண்டு காலம்’ ஆகிறது!
திரைப்பயணத்தில் பொன்விழா கண்டிருக்கும் ‘சிம்பொனி சிகரம் தொட்ட தமிழர்’ இளையராஜா அவர்களுக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் சார்பில், உங்களில் ஒருவனாக இருந்து என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
பண்ணைபுரத்தில் இருந்து புறப்பட்ட இந்த மனிதர், திறமையும், உழைப்பும் இருந்தால், எப்பேர்ப்பட்ட உயரங்களையும் அடையலாம் என்று, அனைத்து மனிதர்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்! இந்த அரை நூற்றாண்டு காலத்தில் ராஜாவின் பாடல்களை முணுமுணுக்காத உதடுகளே தமிழ்நாட்டில் இருக்க முடியாது!
ராஜாவின் பாடல்களை மனதில் ஏற்றி, தங்களின் இன்ப துன்பங்களைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளாத மனிதர்களே இருக்க முடியாது! இளையராஜாவின் இசை – தாயாகத் தாலாட்டுகிறது! காதலின் உணர்வுகளைப் போற்றுகிறது! வெற்றிப் பயணத்துக்கு ஊக்கமளிக்கிறது! வலிகளை ஆற்றுகிறது!
உண்மையில் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இவர் இளையராஜா மட்டுமல்ல; இணையற்ற ராஜா! ஒரு ராஜா இருந்தால், அவருக்கென்று நாடு இருக்கும்; மக்கள் இருப்பார்கள்; எல்லைகள் இருக்கும்! ஆனால், இந்த ராஜா – மொழிகளைக் கடந்தவர் – நாடுகளைக் கடந்தவர் – எல்லைகளைக் கடந்தவர்! அனைத்து மக்களுக்குமானவர்! திரையிசையைக் கடந்த இளையராஜாவின் இசை, அவரது திறனை, அவரது வீச்சை, அவரது ஆற்றலை, அவரது ஆழத்தை, அவரது உயரத்தை, எடுத்துச் சொல்லும். இந்த நேரத்தில், இசைஞானியைப் பற்றி, சோஷியல் மீடியாவில் ஒருவர் எழுதிய சில வரிகளை சொல்ல விரும்புகிறேன்
இளையராஜா மட்டும் இசையமைத்திருந்தால்…! திருக்குறளும் – நற்றிணையும் – புறநானூறும் – குறுந்தொகையும் – ஐங்குறுநூறும் – பதிற்றுப்பத்தும் – பரிபாடலும் – சிலப்பதிகாரமும் – எங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும் என்று எழுதியிருந்தார்.
இசைஞானி அவர்களே, நானும் இதையேதான் தமிழ் ஆர்வலராக உங்களிடம் கோரிக்கையாக வைக்கிறேன்! சங்கத்தமிழுக்கு, தமிழ் இலக்கியங்களுக்கு நீங்கள் இசையமைத்து சில ஆல்பங்களை வெளியிடவேண்டும்! எப்போதும் முதலமைச்சரிடத்தில் தான் கோரிக்கை வைப்பார்கள்; ஆனால், முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டு மக்களின் சார்பில், தமிழர்களின் சார்பில், நான் உங்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். இசை ஆளுமையும், தமிழ்ப்புலமையும் கொண்ட நீங்கள், இந்தக் கடமையை செய்யவேண்டும்! ஏற்கனவே, தமிழ்நெஞ்சங்களில், சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கின்ற உங்கள் மூலமாக, உங்கள் இசைமூலமாக, தமிழ்ச்சுவை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு பரிமாறப்படவேண்டும். ஏனென்றால், “ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்ல…” அந்த நம்பிக்கையுடன் இந்தக் கோரிக்கையை வைக்கிறேன்.
இசையால், நம் நெஞ்சங்களை ஆளும் இளையராஜாவுக்கு, எத்தனையோ புகழ் மகுடங்கள், பாராட்டு மாலைகள், பத்மபூஷண், பத்மவிபூஷண் போன்ற பட்டங்கள் இருந்தாலும், அவருக்கென அவருடைய ஆற்றலுக்கென பொருந்தி, அவருடன் என்றைக்கும் பயணிக்கின்ற பட்டம்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் வழங்கிய ‘இசைஞானி’ பட்டம்! அது பட்டமா இல்லை, பெயராகவே நிலைத்துவிட்டது!
இசைஞானியின் உயரங்களைப் பார்த்து பெருமைப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞருக்கு, இசைஞானி வழங்கிய மரியாதை, யாரும் யாருக்கும் தராத மரியாதை.
வரலாற்றில் எத்தனையோ மாமனிதர்கள் ஒரே பிறந்தநாளை கொண்டாடக் கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால், யாரும் இன்னொருவருக்காக தங்களுடைய பிறந்தநாளை மாற்றிக்கொண்டது கிடையாது! ஆனால், இசைஞானி, தலைவர் கலைஞருக்காக தன்னுடைய பிறந்தநாளை ஜூன் 2-ஆம் நாளாக மாற்றிக்கொண்டார்.
அந்த வகையில், உள்ளத்திலும் ராஜாவாக உயர்ந்து நிற்கிறார் இசைஞானி! தமிழாலும் – இசையாலும் – உயர்ந்தது கலைஞருக்கும் – இசைஞானிக்கும் இருந்த நட்பு. தனிப்பட்ட முறையில் என்னால் மறக்க முடியாத நிகழ்வு என்றால், என்னுடைய மகள் செந்தாமரையின் நாட்டிய அரங்கேற்றத்தில் இளையராஜா பங்கேற்று வாழ்த்தினார். அந்த நட்போடு, அவர் லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்யப் போகிறார் என்று செய்தி வந்தவுடனே, அவருடைய வீட்டுக்கு முதல் நபராக சென்று என்னுடைய பாராட்டுக்களை, வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
ராஜாவும் சிம்பொனி சாதனையை நிறைவேற்றிய வெற்றிக் களிப்புடன், என் வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்தார். இந்த அன்புக்கு நான் என்றைக்கும் கட்டுப்பட்டவன். கடமைப்பட்டவன்! அந்த அன்புடன் சொல்கிறேன். இது இசைஞானி இளையராஜாவுக்காக நடத்தக்கூடிய பாராட்டு விழா மட்டுமல்ல. உங்களுக்கு நாங்கள் எல்லோரும் நன்றி தெரிவிக்கக்கூடிய விழா.
இப்படிப்பட்ட இந்த சிறப்பான விழாவில், ஒரு அறிவிப்பு வெளியிடாமல் நான் இருக்க முடியுமா? இசைத்துறையில், ஆர்வத்துடன் சிறந்த இசையைப் படைக்கின்ற இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கின்ற விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில், இனி ஆண்டுதோறும் ‘இசைஞானி இளையராஜா’ பெயரில் விருது வழங்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
அறிவிப்பு மட்டுமல்ல, ஒரு கோரிக்கையும் முன்வைக்கிறேன். நமது இளையராஜாவின் சாதனைகளுக்கு எந்த மகுடம் சூட்டினாலும், அது சாதாரணம் தான். அப்படிப்பட்ட மேதைக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கப்பட வேண்டும் என்ற ஆவலை இந்த மேடையில் நின்று உங்கள் அனைவரின் சார்பில், தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கக்கூடிய ராஜாவின் ரசிகர்களின் சார்பில் இந்த விழாவில் நான் தெரிவிக்க விரும்புகிறேன். இது நிச்சயம் நிறைவேறும் என்று நான் நம்புகிறேன். இந்த அரங்கத்தில், இசைஞானியுடைய இசையைக் கேட்டு மயங்கியிருக்கும் எல்லோருடைய உணர்வுகளை, அவருடைய பாடல் வரிகளிலேயே சொல்லவேண்டும் என்றால், “இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே… இன்பத்தில் ஆடுது என் மனமே!”
இசைஞானி அவர்களே… உங்கள் பயணம் இன்னும் பல்லாண்டுகாலம் தொடர வேண்டும்! தொடர வேண்டும்! என்று தமிழ் மக்களின் சார்பில் வாழ்த்துகிறேன். வாழ்க இளையராஜா! வாழ்க இசைராஜா!” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.