சென்னை: “கோடைக்கால மின் தேவை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளது. இதனால், இந்த ஆண்டு கோடை மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்” என தமிழக மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் மின்நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை, மின்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் இன்று ஆய்வு செய்தார். அப்போது, தற்போது நிலவி வரும் கடும் கோடை வெப்பம், பல்வேறு மாவட்டங்களில் கடும் சூறாவளி காற்று மற்றும் கனமழை காரணமாக மின்னகத்தில் பதிவான மின்சாரம் தொடர்பான பொதுமக்களின் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியது, “மின்னகத்தில், பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக, 3 ஷிப்டுகளில், ஒவ்வொரு ஷிப்ட்டுக்கும் 3 மேற்பார்வையாளர்கள் உட்பட 94 பணியாளர்களைக் கொண்டும், 45 மின்பகிர்மான வட்டங்களிலும் நாள் ஒன்றுக்கு 4 பேர் வீதம் 176 நபர்களைக் கொண்டும் 24×7 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், 9498794987 எண்ணுக்கு வரும் புகார்களை பெறுவதற்கு வசதியாக மின்னகத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை 65-ல் இருந்து 94 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது, தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்யுமாறும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் வீசிய சூறைக் காற்று மற்றும் கனமழை பெய்த காரணத்தால் மின்கம்பங்கள் சாய்ந்ததால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி மாநகராட்சி மின்தகன மேடையில் உயிரிழந்த ஒருவரின் உடலைக் கொண்டு வந்து தகனம் செய்வதற்கு 2 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், 2 மணி நேரத்துக்குள் மின்விநியோகம் சரி செய்யப்பட்டு அந்த உடல் தகனம் செய்யப்பட்டது.
சில இடங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்சினை (லோ வோல்டேஜ்) ஏற்பட்டு வருகிறது. அங்கு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பழைய மின்மாற்றிகளை மாற்றி அமைப்பது, துணை மின்நிலையங்களில் மின்விநியோகத்தை சீரமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
கோடைக்கால மின் தேவை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளது. கோடை மழை பெய்து வருவது, காற்றாலை சீசன் தொடங்கி இருப்பது ஆகியவற்றால் இந்த ஆண்டு கோடை மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும். காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் விஷயத்தில், மின்வாரியத்துக்கு எவ்வளவு தேவை உள்ளதோ அதைப் பெற்று பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது” என்று அமைச்சர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின்னுற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.