சென்னை: இந்து மதத்தின் மீது தீரா வெறுப்பு கொண்டவர் முதல்வர் ஸ்டாலின் என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக தான் அவருக்கு அரசியலில் அடையாளம் தந்தது. சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று எத்தனை உயர் பதவிகளை ஒரு கட்சி தந்தாலும், எல்லாவற்றையும் விட, தமிழ் மக்களின் நலனை விட தன் மதமே முக்கியம் என்பதை, திமுகவில் இணைந்ததன் மூலம் அன்வர் ராஜா உறுதிப்படுத்தி இருக்கிறார்.
பெற்ற அன்னையைப் போல, பிறந்த தாய் மதமும் முக்கியம் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் உணர்வின்றி இருக்கும் இந்துக்களுக்கு, தன் கட்சித்தாவல் மூலம், செவிட்டில் அறைந்தது பாடம் சொல்லியிருக்கிறார் அன்வர் ராஜா. இன்றைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.
அப்போது அதிமுக சார்பில் தேர்தல் பொறுப்பாளராக அன்வர்ராஜா இருந்தார். ஆனால், அங்குபோட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற மறைமுகமாக உள்ளடி வேலை செய்தார். அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை.
அந்த அளவுக்கு இந்து மதத்தின் மீது தீரா வெறுப்பு கொண்டவர். ஆனால் அவரை தேடி சென்று சரணடைந்திருக்கிறார் அன்வர்ராஜா. இதன் மூலம், திமுக இந்துக்களின் விரோதி என்பதையும், தன்னைப் போன்றவர்களின் நண்பன் என்பதையும் குறிப்பால் உணர்த்தி இருக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.