மதுரை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்று மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்து முன்னணி சார்பில் மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்து முன்னணி நிர்வாகி கிஷோர்குமார் இவற்றை வாசித்தார்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அறநிலையத் துறை கார்த்திகை தீபம் ஏற்ற மறுக்கிறது. அதற்காக 30 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறோம். எனவே, வரும் கார்த்திகை மாதம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீர் பகல்ஹாமில் புகுந்து இந்து சகோதரர்களை சுட்டுக் கொன்றனர். அதற்கு பதிலடியாக, நமது ராணுவத்தினரும், பிரதமர் மோடியும் குங்குமத்தின் பெயரை வைத்து தாக்குதல் நடத்தி, பாரதம் வல்லரசு என்பதை நிரூபித்துள்ளனர். இதற்காக பிரதமர் மோடியைப் பாராட்ட வேண்டும்.
சென்னிமலை, திருப்பரங்குன்றம், பழநிமலை என முருகனின் தலங்களில் பிரச்சினை செய்கின்றனர். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று கூறி, மாமிசம் சாப்பிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. குன்றம் குமரனுக்கே என்பதால், மலைகளைப் பாதுகாக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். கோயில்களிலிருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும். முருக பக்தர்கள் மாநாட்டில் கூடிய கூட்டத்தைப் பார்த்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கலங்கிப் போயுள்ளார். இங்கு ஒரு காக்கிச்சட்டைகூட இல்லை.
உள்ளே ஒரு போலீஸ் வரவில்லை. எங்களுக்கு பாதுகாப்பு முருகக் கடவுள்தான். இந்துக்களையும், இந்து சமய நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சியைகளையும் புறக்கணிக்க வேண்டும். வரும் தேர்தலில் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வாக்கு வங்கியை நிரூபித்துக்காட்ட வேண்டும்.
மாநாட்டில் பல லட்சம் பேர் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். எனவே. மாதந்தோறும் கூட்டு வழிபாடு நடத்த வேண்டும். மேலும், நாத்திகம் சொல்லி நாட்டை நாசப்படுத்தியவர்களை விரட்டியடிக்க, இனி மாதந்தோறும் கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும்.