வேலூர்: மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
வேலூரில் நேற்று நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர் அன்புமணி பேசியதாவது: பல்வேறு துறைகளிலும் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும்.
அடித்தட்டு, பின்தங்கிய மக்களை மேம்படுத்த எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மேலும், சமூக நீதியை நடைமுறைபடுத்தவும் திமுக தவறிவிட்டது. கிராமங்களில் பாமக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். ஜூலை 25-ல் ராமதாஸ் பிறந்த நாளில் தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன்.
தமிழகத்தில் ரூ.10 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்று கேட்டால், அதற்கு பதில் அளிப்பதில்லை.
தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு, திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது. சித்திரை முழு நிலவு மாநாட்டைப் பார்த்து திமுக அரண்டு போயுள்ளது. இடஒதுக்கீடுவழங்காமல் ஏமாற்றிய திமுகவுக்கு, வரும் தேர்தலில் வன்னியர் சமூகத்தினர் தக்க பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அன்பு மணி பேசினார்.