சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சூளைமேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில், மு.வீரபாண்டியன் புதிய மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், 2018 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூக நீதி போராட்டங்களில் முக்கிய பங்காற்றியவர். மேலும், இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 2015-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்ற முத்தரசன், தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்து வந்தார என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செய்லாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளராவும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினுடைய மாநில பொதுச் செயலாளராகவும் திறம்பட பணியாற்றி வருபவர் தோழர் மு.வீரபாண்டியன். 40 ஆண்டு காலமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு உழைக்கும் மக்களுக்காக போராடி வருபவர்.
தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் புரட்சிகரமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக உழைப்பாளி மக்களின் நலன்களை பாதுகாப்பதிலும், இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமையை பலப்படுத்திடவும், மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதிலும் ஒருமித்த கருத்துடன் செயல்படுவோம்” என்று கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மு.வீரபாண்டியனுக்கு வாழ்த்துகள். இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசனுக்கு நன்றி. ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.