மாமல்லபுரம்: உறுதியாக இருந்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று பள்ளி மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, பிளஸ் 2 வகுப்புகளில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா, மாமல்லபுரம் அருகே தனியார் சொகுசு விடுதியில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: கல்வியில் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. நீட் தேர்வு மட்டும் உலகம் அல்ல. நீட்டை தாண்டிய இந்த உலகம் ரொம்ப பெரியது. அதில், நீங்கள் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. அதனால், உங்களின் மனநிலையை மிகவும் தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகம் என்ற ஒன்று இருந்ததால்தான், இந்த உலகம் சுதந்திரமாக இருக்க முடியும்.
பணம் கொடுத்து வாக்கு வாங்கி வெற்றி பெற்று விடலாம் என நினைப்பவர்களின் செயலை ஊக்கப்படுத்த வேண்டாம். பணம் வாங்காதீர்கள், உங்களின் பெற்றோரையும் வாங்க வேண்டாம் எனக் கூறுங்கள். அதைப் பின்பற்றுங்கள். ஆனால், அடுத்த ஆண்டு பாருங்கள் வண்டி, வண்டியாக கொண்டு வந்து கொட்டுவார்கள். அத்தனையும் உங்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான். நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இதுவரை ஊழல் செய்யாதவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பெற்றோர் மிகவும் அழுத்தம் கொடுக்க வேண்டாம். அவர்களுக்கு பிடித்த துறைகளில் சாதித்து காட்டுவார்கள். அதேபோல், சாதி, மதத்தை வைத்து பிரிவினை வளர்க்கும் சிந்தனை பக்கம் செல்லாதீர்கள். விவசாயிகள், தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்து பொருட்களை உற்பத்தி செய்யவில்லை. அவற்றை போதை பொருட்களைப்போல ஒதுக்குவதுதான் நல்லது. உறுதியாக இருந்தால் நிச்சயம் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், பிளஸ் 2 வகுப்பில் தமிழக அளவில் 599 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவி ஓவியா அஞ்சலி மற்றும் 10-ம் வகுப்பில் 499 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த சோபியா ஆகியோருக்கு வைரத்தோடு மற்றும் பாராட்டு சான்றினை விஜய் வழங்கினார்.
பின்னர், 88 தொகுதிகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 676 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ். காசோலைகளை வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.