சென்னை: இதர போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்தி தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் கட்டணமின்றி மாநகர பேருந்துகளில் பயணிக்கலாம் என, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழறிஞர்கள், எல்லை காவலர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர்தியாகிகள் மற்றும் அவரது வாரிசுதாரர்களுக்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள போக்குவரத்துக் கழக பேருந்துகளால் வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்தி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.
அவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் உடன் செல்லும் உதவியாளருக்கும் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனவே, இதுகுறித்து அனைத்து கிளை மேலாளர்களும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.