சென்னை: இணையவழி நிதி மோசடியை முற்றிலும் தடுக்க சைபர் க்ரைம் போலீஸார்- வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாநில அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ‘சைபர் குற்றவாளிகள்’ பொது மக்களின் கோடிக் கணக்கான பணத்தை சுருட்டி விடுகின்றனர்.
இதுபோன்ற இணையவழி நிதி மோசடி மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் சைபர் க்ரைம் போலீஸார் மற்றும் வங்கி அதிகாரிகளிடையே நேற்று நடைபெற்றது.
சென்னை அசோக் நகரில் உள்ள மாநில சைபர் க்ரைம் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் தலைமை தாங்கினார். இந்தியா முழுவதிலும் இருந்து 34 முக்கிய வங்கிகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான கணக்குகளை முடக்கு வதில் சரியான நேரத்தில் உதவுவதற்காக சைபர் க்ரைம் தலைமையத்தில் வங்கி பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும், விசாரணைக்கு உதவுவதற்காக வங்கிகளின் தரவுகளை மேம்படுத்த வேண்டும், போலி கணக்குகளை அடையாளம் காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதோடு மட்டும் அல்லாமல் சைபர் நிதி மோசடியை தடுக்க போலீஸார் மற்றும் வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், போலி வங்கி கணக்குகளை அடையாளம் கண்டு அவற்றை முடக்க வேண்டும் என கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் வலியுறுத்தினார். மேலும், இக்கூட்டத்தில் சைபர் குற்றம் நடைபெற்று விட்டால் அதுதொடர்பாக புகார் அளிக்கும் வகையில் 1930 என்ற எண் பொது மக்கள் அனைவரையும் சென்றடையும் வகையில் விழிப்புணர்வு செய்ய வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.