சென்னை: பத்திரப்பதிவு இணையதள வழிகாட்டி மதிப்புக்கேற்ப பத்திரப் பதிவு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பனனீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 52 மாத திமுக ஆட்சியில், நிலங்கள் மற்றும் வீட்டுமனைகளுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்கு நீதிமன்றம் தடை விதித்தும், அதை நடைமுறைப்படுத்தவில்லை. பேசிக், பிரீமியம், அல்ட்ரா பிரீமியம் என 3 வகைகளாக பிரித்து, வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது.
பின்னர் தெரு வாரியாகவும், அடுக்குமாடி கட்டிடங்களில் பிரிபடா பாகத்துக்கு தனி பதிவு முறை, கட்டிடங்களுக்கு தனி பதிவு முறை என்றிருந்ததை ஒரே பதிவாக மாற்றியும் கூட்டுப் பதிவுக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக 1000 சதுர அடிக்கு ரூ.5 லட்சம் என்றிருந்த பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் தற்போது 2 மடங்குக்கும் மேல் உயர்ந்துவிட்டது.
பதிவுத் துறை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்பைவிட கூடுதலாக வழிகாட்டி மதிப்பை சார் பதிவாளர்கள் தெரிவிப்பது வீடு மற்றும் நிலம் வாங்குபவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித எழுத்துப்பூர்வமான ஆணையும் அரசு வெளியிடாத நிலையில், கூடுதல் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் வசூலிப்பது சட்டத்துக்கு புறம்பானது.
இந்த விவகாரத்தில் முதல்வர் தனிக் கவனம் செலுத்தி, பதிவுத் துறை இணையதளத்தில் உள்ள வழிகாட்டி மதிப்புக்கு ஏற்ப முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தை மட்டும் வசூலிக்க ஆவனசெய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.