சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் மற்றும் படிகள் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டது. அந்த தேதிக்கு முன்பு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 என்றும், அதே தேதிக்கு பின் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இதன் விளைவாக, 2009-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதிக்கு பின் பணியமர்த்தப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சுமார் ரூ.25 ஆயிரம் அளவுக்கு இன்று குறைவான ஊதியத்தை பெற்று வருகின்றனர்.
இந்த வித்தியாசத்தை சீர் செய்யக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் 2018-ம் ஆண்டு போராட்டம் நடத்தியபோது, இதற்கு ஆதரவு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின், இந்த வாக்குறுதியை திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறச் செய்தார். ஆனால், இந்த வாக்குறுதி திமுக ஆட்சி முடிவடையும் இந்தத் தருவாயிலும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 2023-ம் ஆண்டு போராட்டம் நடத்தியபோது, இதற்காக ஒரு குழுவை திமுக அரசு நியமித்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட இடைநிலை ஆசிரியர்கள், செப்டம்பர் மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தை மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர். இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாதது கண்டனத்துக்குரியது.
திமுக ஆட்சி முடிவுக்கு வர உள்ள நிலையில், கொடுத்த வாக்குறுதியை மனதில் நிலை நிறுத்தி, இடைநிலை ஆசிரியர்களின் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.