சென்னை: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஒரு உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
இடுக்கி கட்டப்பனையில் உள்ள உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராமன், மைக்கேல் என்கிற செல்வன், சுந்தரபாண்டியன் ஆகியோர் ஈடுபட்டனர்.
கழிவுநீர் தொட்டிக்குள் முதலில் சென்ற மைக்கேல் வர தாமதமானதால், ஒப்பந்ததாரரான ஜெயராமன் உள்ளே இறங்கியபோது மயக்கமுற்றார். அவரைத் தொடர்ந்து சுந்தரபாண்டியனும் தொட்டியில் இறங்கியபோது மயக்கமடைந்தார்.
அவர்கள் 3 பேரும் உடனடியாக கட்டப்பனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மூவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இடுக்கியில் தமிழகத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 3 தமிழர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மலக்குழிகளில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்பொழுது ஓயும் எனத் தெரியவில்லை. தூய்மைப் பணியாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதிலும் அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதிலும் மாநில அரசுகள் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும் என இத்தருணத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும், கேரளாவில் பாதிக்கப்பட்ட அக்குடும்பங்களுக்குத் தமிழக அரசின் சார்பாக முடிந்த உதவிகளை செய்து கொடுக்குமாறும் முதல்வர் ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.