சென்னை: ‘கரூர் துயர சம்பவத்துக்காக தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருது தான் கொடுக்க வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்த கருத்துக்கு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துள்ளார்.
இது குறித்து அன்பில் மகேஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மரியாதைக்குரிய அண்ணன் அன்புமணி ராமதாஸ், நாகரிகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார். கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சுக் குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். என்னை மக்களில் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்!
முதல்வர் ஸ்டாலின் சொல்வதுபோல “எந்தத் தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார்!”. தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம், ஆறுதல் சொல்கிறோம். வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என்றே கருதுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்
அன்புமணி கூறியது என்ன? – முன்னதாக, இன்று விருதுநகர் காரியாப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “கரூர் துயரச் சம்பவத்தை வைத்து இவர்கள் அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள். அதில் ஓர் அமைச்சர் தேம்பித் தேம்பி அழுகிறார். அவருக்கெல்லாம் ஆஸ்கர் விருதுதான் கொடுக்க வேண்டும். மக்களை வெகு நாட்கள் ஏமாற்ற முடியாது” எனத் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.