ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் ஶ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் இன்று ஆஜராகினர். வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் என்பவர், தனது உறவினருக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதாக அளித்த புகாரின் பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2021 நவம்பரில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அதிமுக நிர்வாகி மாரியப்பன் ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அதே நாளில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட வேலைகளுக்கு பலரிடம் பணம் பெற்று, ராஜேந்திரபாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துபாண்டி ஆகிய 4 பேர் மீது மோசடி உட்பட 4 பிரிவுகளில் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் மீது 2023 ஜனவரியில் ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் / மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மே 19-ம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜூலை 16-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஶ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உட்பட 7 பேர் ஆஜராகினர். வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்