சென்னை: ஆவடியில் நிலவும் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து மாநகராட்சிக்கு எதிராக ஆக.28-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் தெற்கு மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பைகள் சரிவர அள்ளப்படுவதில்லை. பாதாள சாக்கடை முறையாக அமைக்கப்படவில்லை. கொசு மருந்து முழுமையாக அடிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக மக்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளால் அவதியுற்று வருகின்றனர்.
மக்களின் வாழ்வாதார வசதிகளை செய்துதராத நிலையில் வீட்டுவரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இங்குள்ள கடைகளுக்கு குப்பை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை, எளிய, நடுத்தர மக்களும், வியாபாரிகளும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இவ்வாறு ஆவடி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளையும், நிர்வாக சீர்கேடுகளையும், கண்டும் காணாமலும் இருந்து வரும் திமுக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் அதிமுக திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பில் வரும் 22-ம் தேதி ஆவடி மாநகராட்சி எம்ஜிஆர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதற்கு முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமை தாங்குகிறார். முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், அதிமுக அமைப்புச் செயலாளர் திருவேற்காடு பா.சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏ வி.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.