ஆவடி பேருந்து முனையத்தை நவீனப்படுத்தி புதிய பேருந்து முனையமாக மாற்றும் பணி தொடங்கியுள்ளதால், இங்கிருந்த பேருந்து முனையம் செப்.14-ம் தேதி (இன்று) முதல், 100 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து, சென்னை மாநகர் போக்குவரத்து கழக இணை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) திட்டத்தின் கீழ், ஆவடி பேருந்து முனையத்தை நவீனப்படுத்தி, புதிய பேருந்து முனையமாக மாற்றி அமைக்க கட்டுமானப் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக, ஆவடி பேருந்து முனையம் செப்.14-ம் தேதி (இன்று) முதல் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதாவது, இந்த முனையத்தில் இருந்து எதிர்புறத்தில் எம்.டி.எச் சாலையில் 100 மீட்டர் தொலைவில் உள்ள காலி இடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்படும். எனவே, இப்பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்ட அனைத்து பேருந்துகளும் மேற்குறிப்பிட்ட தற்காலிக பேருந்து முனையத்தில் இருந்து புறப்படும்.
மேலும், கட்டுமானப் பணிகள் முடியும் வரை இந்த தற்காலிக பேருந்து முனையத்தில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும். மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையமும் செயல்படும்.