சென்னை: ஆவடியில் போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (சிவிஆர்டிஇ) சார்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள போர் வாகன மற்றும் ஆயுத அமைப்பு சோதனை மையத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலர் மற்றும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி.காமத் திறந்து வைத்தார்.
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (சிவிஆர்டிஇ) சார்பில், ஆவடி அடுத்த வெள்ளனூரில் புதிதாக போர் வாகன மற்றும் ஆயுத அமைப்பு சோதனை (ஏடபிள்யூடிசி) மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலர் மற்றும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத் இன்று (மே 17) திறந்து வைத்தார்.
போர் வாகன மற்றும் ஆயுத அமைப்பு சோதனை மையத்தில் 26 வகையான சோதனை தடங்கள் உள்ளன. அவை கவச வாகனங்களின் முழுமையான வாகன செயல்திறனை சோதிக்கும் திறன் வாய்ந்தவையாகும். இந்த செயல்திறன் சோதனைகள், சிவிஆர்டிஇ நிறுவனத்தின் மட்டுமல்லாது வேறு எந்த வடிவமைப்பு நிறுவனத்தாலும் வடிவமைக்கப்பட்ட கவச வாகனங்களையும் சோதனைகளுக்காக வழங்குவதற்கு முன்பு, அவற்றின் நம்பகத் தன்மையை சரிபார்க்க உதவும்.
மேலும், சிவிஆர்டிஇ நிறுவனத்தின் சிறப்பு இயந்திர சோதனை மையத்தையும் டிஆர்டிஓ தலைவர் திறந்து வைத்தார். சிவிஆர்டிஇ நிறுவன வளாகத்துக்குள் முன்னாள் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவுச் சின்னத்தையும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி.காமத் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், டிஆர்டிஓ தலைவர் சமீர் வி காமத், சிவிஆர்டிஇ நிறுவனத்தின் தற்போதைய திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.
கவச போர் வாகனங்களுக்கான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் விசைத் திறன் தொடர்பான அம்சங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்வில், தலைமை இயக்குநர் (ஆயுதங்கள் மற்றும் போர் பொறியியல்) டாக்டர் பிரதீக் கிஷோர், தலைமை இயக்குநர் (வளங்கள் மற்றும் மேலாண்மை) மனு கோருல்லா, சிவிஆர்டிஇ நிறுவனத்தின் இயக்குநர் ஜே. ராஜேஷ் குமார், சிவில் பணிகள் மற்றும் எஸ்டேட்ஸ் இயக்குநரகத்தின் இயக்குநர் டாக்டர் பிஷ்வஜீத் சௌபே, கவச வாகனங்கள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சய் திவேதி மற்றும் பலர் பங்கேற்றனர்.