சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாட்கள் பயணமாக நே;ற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் இன்று அல்லது நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், பதவி நீட்டிப்பு செய்யப்படவில்லை.
விதிகள்படி புதிய ஆளுநர் பதவியேற்கும்வரை, ஏற்கெனவே உள்ள ஆளுநர் தொடருவார் என்பதால், அவர் ஆளுநராக உள்ளார். இதனிடையே, தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு நீடித்து வருவதால், அடிக்கடி ஆளுநர் டெல்லி சென்று வருகிறார். கடந்த மாதம் 26-ம் தேதி ஒரு நாள் பயணமாக ஆளுநர் டெல்லி சென்றுவிட்டு வந்தார்.
இந்நிலையில், மீண்டும் 4 நாட்கள் பயணமாக நேற்று காலை சென்னையில் இருந்து டெல்லி சென்றார். ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், ஒரே வாரத்தில் 2-வது முறையாக 4 நாட்கள் பயணமாக டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்துறை அமைச்சரை ஆளுநர் சந்தித்து தமிழகத்தின் அரசியல் நிலவரம், சட்டம் – ஒழுங்கு போன்றவை குறித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.