சென்னை: மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட கேடயங்களில் திருக்குறளை தவறாக அச்சிடப்பட்டதால் அவற்றை திரும்பப்பெற்று, திருத்தம் செய்து வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த 13-ம் தேதி தேசிய மருத்துவர் தின விழா நடந்தது. சிறப்பாக சேவையாற்றிய 50 மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேடயங்களை வழங்கி கவுரவித்தார். அந்த கேடயங்களில் திருக்குறள் அச்சிடப்பட்டிருந்தது. அதுதான் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
கேடயத்தில் இடம் பெற்றிருப்பது திருக்குறளே இல்லை என்று தமிழ் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், 50 மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட கேடயங்களை திரும்ப பெற்று, திருக்குறளை திருத்தம் செய்து சில தினங்களில் மீண்டும் வழங்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கேடயம் பெற்ற மருத்துவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: கோவையை சேர்ந்த மருத்துவர்தான் விழாவை ஏற்பாடு செய்தார். மருத்துவர்களுக்கு வழங்கப்படும் கேடயத்தில் திருக்குறளில் மருத்துவம் தொடர்பான அதிகாரத்தில் இருந்து குறள்களை அச்சிடுமாறு ஒருவரிடம் தெரிவித்துள்ளார். அந்த நபர் ‘சாட் ஜிபிடி’ மூலம் குறளை தேடி அச்சிட்டுள்ளார்.
அதனால்தான் திருக்குறள் தவறாக இடம் பெற்றுள்ளது. இது விழா ஏற்பாடு செய்த மருத்துவரால் நடந்த தவறு. விழாவை ஏற்பாடு செய்த மருத்துவர், தவறு நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், கேடயத்தில் சரியான திருக்குறள்களை அச்சிட்டு வழங்குவதாகவும் அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.