திருநெல்வேலி: “மாநில ஆளுநர்களின் அதிகாரங்களில் முதல்வர்களின் தலையீடு இருக்கக் கூடாது” என்று மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாளையங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 268-வது குருபூஜையை விழாவையொட்டி அவரது சிலைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக பாஜக நிர்வாகிகள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியது: “சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் 68 ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் மக்களுக்குத் தெரிய வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தபால் தலை வெளியிட்டு அவர்களை கவுரப்படுத்தி வருகிறார். தேசத்துக்குப் போராடியவர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் குருபூஜை விழாவில் கவுரவம் செய்யவே திருநெல்வேலிக்கு வருகை தந்தேன்.
பல்கலைக்கழகங்களில் காவி புகுத்தப்படவில்லை. காவி என்பது இந்த மண்ணுக்குச் சொந்தமானது. இப்போது மட்டுமல்ல, வாஜ்பாய் காலத்தில் இருந்தே காவி பல்கலைக்கழகத்தில் புகுத்தப்படுவதாக அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர். காவி என்பது அரசியலுக்கான நிறமல்ல, அது பற்றற்ற தன்மையைக் குறிக்கும் நிறம். அறநிலையத் துறை அமைச்சர்கூட காவி அணிந்துதான் கோயிலுக்குச் செல்கிறார்.
மாநில முதல்வர்களுக்கு மகத்தான அதிகாரங்கள் உள்ளன. அதைவைத்து மக்களுக்கான நல்ல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு ஆளுநருக்கு இருக்கும் ஒரு சில அதிகாரங்களில் முதல்வர்கள் தலையிடக் கூடாது. மாநிலத்தில் முதல் பிரஜையாக ஆளுநர்தான் செயல்படுகிறார். நான் 4 மாநிலங்களில் ஆளுநராக இருந்திருக்கிறேன். அதில், 2 மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்தான். ஆனால், அங்கு இதுபோன்ற எந்த விதமான பிரச்சினைகளும் ஏற்படவில்லை.
பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்கள் ஆளுநரிடமே உள்ளது. கேரள அரசு தொடர்ந்த ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதற்கான தீர்ப்பை வழங்கியுள்ளது. தற்போது ஒரு தீர்ப்பை மட்டும் பெற்றுக்கொண்டு முதல்வருக்குதான் அதிகாரம் என இங்குள்ளவர்கள் கூறி வருகின்றனர். மாநில ஆளுநர்களின் அதிகாரங்களுக்குள் முதல்வர்கள் தலையீடு இருக்கக் கூடாது.
ஆளுநர் பதவி என்பது நியமன பதவி தானே, முதல்வர்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற கேள்விக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் முதல்வர்களுக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதா? பிரதமருக்குத்தான் முழு அதிகாரம் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா. அப்படி என்றால் எதேச்சதிகாரத்துடன் அவர் செயல்பட முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
மாணவர்கள் கோட்சே வழியில் செயல்படக் கூடாது எனத் தமிழக முதல்வர் பேசியது குறித்த கேள்விக்கு, “வன்முறைக்குள் மாணவர்கள் செல்லக் கூடாது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ராஜீவ்காந்தியை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்களுடன் கட்டியணைத்து முதல்வர் நட்பு பாராட்டுகிறார். அது எந்த வகையில் சரியானது? வன்முறை, பயங்கரவாதத்தை யார் செய்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க் குரல் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.