சென்னை: ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்தை தமிழக காங், விசிகவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் புறக்கணித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாகவும், தமிழக நலனுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகவும் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார்.
இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் ஆளுநர்களின் அதிகார வரம்பு குறித்து அறுதியிட்டு கூறிய பிறகும், திருந்த மறுத்து தனது நிலைபாடுகளையே மேற்கொண்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட கலைஞர் பல்கலைக்கழக மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உச்ச நீதிமன்றம் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என தானடித்த மூப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்த பின்னணியில், ஆளுநர் ஆர்.என் ரவியின் அணுகுமுறையை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுதந்திரத் தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.