ஆலங்குடி வெங்கடாசலம் என்று சொன்னால் அதிமுக-வின் சீனியர் தலைவர்கள், “அவரா..?” என்று அதிசயித்து வாய்பிளப்பார்கள். ஜெயலலிதா சீட் கொடுக்கவில்லை என்பதற்காக அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று, அப்பேர்பட்ட அம்மாவுக்கே தனது செல்வாக்கைக் காட்டியவர் வெங்கடாசலம்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அ.வெங்கடாசலம். கட்சியால் தனக்கு என்ன பலன் என்று பார்ப்பதைவிட தன்னால் கட்சிக்கு என்ன பலன் என்று பார்த்த தனித்துவமான அரசியல்வாதிகளில் வெங்கடாசலமும் ஒருவர். அதிமுக-வில் சாமானிய தொண்டனாக இருந்து அமைப்புச் செயலாளர் வரைக்கும் உயர்ந்தவர். புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்தரையர் சமூகத்து மக்கள் வெங்கடாசலத்தை தங்களுக்கான தலைவனாகவே பார்த்தார்கள். முதல் முறையாக இவருக்கு 1984-ல் ஆலங்குடி தொகுதியில் சீட் கொடுத்தார் எம்ஜிஆர். அந்தத் தேர்தலில் வெற்றிபெற்றாலும் அடுத்து வந்த மூன்று தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பை அதிமுக இவருக்கு வழங்கவில்லை.
1996-ல் ஜெயலலிதா தனக்கு ஆலங்குடியில் வாய்ப்பளிப்பார் என்று பெரிதும் எதிர்பார்த்தார் வெங்கடாசலம். ஆனால், இவருக்கு வாய்ப்பளிக்கவில்லை ஜெயலலிதா. அப்போது தனது ஆதரவாளர்களை அழைத்துக் கருத்துக் கேட்ட வெங்கடாசலம், அவர்கள் தந்த ஆலோசனைப்படி ஆலங்குடியில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். அந்தத் தேர்தலில் பெருவாரியான இடங்களை திமுக – தமாகா கூட்டணி கைப்பற்றிய நிலையில், ஆலங்குடியை கைப்பற்றி அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் வெங்கடாசலம்.
ஜெயலலிதாவை பகைத்துக் கொண்டதால் அவர் இனி அதிமுக பக்கம் போகமாட்டார்; திமுக-வில் இணைந்துவிடுவார் என்றெல்லாம் வெங்கடாசலம் குறித்து செய்திகள் பரவிய நிலையில், எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியாகவே இருந்தார். அவரது பொறுமையையும் மக்கள் செல்வாக்கையும் மெச்சிய ஜெயலலிதா அவரை மீண்டும் அதிமுக-வில் சேர்த்துக் கொண்டதுடன், 2001 தேர்தலில் அவரை ஆலங்குடியில் நிற்கவும் வைத்தார்.
இரண்டாவது முறையாக ஆலங்குடியை வென்றெடுத்த வெங்கடாசலத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்கினார் ஜெயலலிதா. ஆனால், அடுத்த தேர்தலில் அவரால் ஆலங்குடியை தக்கவைக்க முடியவில்லை. இந்த நிலையில், தனிப்பட்ட பிரச்சினை காரணமாக 2010-ல் எதிரிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் வெங்கடாசலம். அப்போது புதுக்கோட்டை மாவட்டமே கலவரக்காடானது.
அடுத்த ஆறே மாதத்தில் 2011 சட்டமன்ற தேர்தல் வந்தது. அப்போது வெங்கடாசலத்தின் மகனுக்கு அதிமுக சீட் கொடுக்கும் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனை ஆலங்குடியில் நிறுத்தினார் அம்மா. இதனால் தந்தை வழியில் வெங்கடாசலத்தின் மகன் ராஜபாண்டியன் சுயேச்சையாக நின்றார். ஆனால், தந்தைக்கு இருந்த ஆதரவு மகனுக்கு இல்லாமல் போனதால் கு.ப.கிருஷ்ணன் வெற்றி பெற்றார். இருந்த போதும். அனைத்து தரப்பு மக்களிடமும் நெருங்கிப் பழகிய வெங்கடாசலம், முத்தரையர் சமூகத்து மக்களின் தனித்த அடையாளமாக மாறிப்போனார்.
ஆண்டு தோறும் அக்டோபர் 7-ம் தேதி வெங்கடாசலம் நினைவு நாளில் வடகாட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது அபிமானிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள். இதில், தேர்தல் காலமாக இருந்தால் அனைத்துக் கட்சிகளும் போட்டிபோட்டு வந்து அஞ்சலி செலுத்தும். அப்படித்தான் இந்த ஆண்டும் வெங்கடாசலத்துக்கு அரசியல் கட்சிகள் அஞ்சலி செலுத்துவதற்காக ஃபிளெக்ஸ்கள், பேனர்கள் சகிதம் தயாராகிக் கொண்டிருக்கிறது வடகாடு.
இது குறித்து நம்மிடம் பேசிய வெங்கடாசலத்தின் ஆதரவாளரும் அதிமுக ஒன்றி இலக்கிய அணி செயலாளருமான முத்துமாணிக்கம் “அதிமுக-வை தனது சொந்தக் கட்சி போலவே பாவித்து வந்தவர் வெங்கடாசலம். சுயேச்சையாக நின்று வென்ற போது கூட அவர் இன்னொரு கட்சிக்குப் போகவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமில்லாது பிற மாவட்டங்களிலும் அவருக்கான அரசியல் இருந்தது.
தனது எளிமைக்காகத்தான் மறைந்த பிறகும் அவர் போற்றப்படுகிறார். அவரால் பலபேர் அரசியலில் உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளனர். அதனால் தான் அவரது நினைவு நாளில் இளைஞர்கள் இங்கு அதிகளவில் குவிகின்றனர். அவரை ஒதுக்கிவிட்டு அரசியல் செய்யமுடியாது என்பதால் தான் தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆலங்குடிக்கு வருகின்றன” என்றார்.
எம்ஜிஆர் விசுவாசியான வெங்கடாசலம், ‘வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்… இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்பது போலத்தான் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்.