“திமுக-விடம் இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்” என்கிறார் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். அதேசமயம், மீண்டும் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியைக் கேட்டுப் பெற அதிக முனைப்புக் காட்டி வருகிறது சிபிஎம். அதேபோல், தங்களுக்குச் சாதகமான புதுக்கோட்டை அல்லது ஆலங்குடி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் அழுத்தமாக இருக்கிறது சிபிஐ. இதில் சிக்கல் என்னவென்றால் ஆலங்குடி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனின் தொகுதி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் இடதுசாரி சிந்தனையாளர்கள் விரவி இருக்கிறார்கள். இங்குள்ள புதுக்கோட்டை, ஆலங்குடி தொகுதிகளை ஏற்கெனவே சிபிஐ வென்றுள்ளது. அதேபோல், கடந்த தேர்தலில் கந்தவர்வக்கோட்டையை சிபிஎம் கைப்பற்றி உள்ளது. சொல்லப்போனால், கடந்த முறை கந்தவக்கோட்டையை சிபிஎம் கேட்கவே இல்லை. கடைசி நேரத்தில் தான் இந்தத் தொகுதியை சிபிஎம்-முக்கு டிக் அடித்தது திமுக. இதையடுத்து, முன்பு மக்கள் நலக் கூட்டணியில் இங்கு போட்டியிட்ட சின்னதுரையையே வேட்பாளராக நிறுத்தியது சிபிஎம். அவரை ஜெயிக்க வைத்தது திமுக.
கடந்த நான்கு ஆண்டுகளில் கந்தர்வக்கோட்டை தொகுதிக்கு மேம்பாலம், சாலை வசதிகள், புதிய கட்டிடங்கள், ஐடிஐ உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தந்திருக்கிறது திமுக அரசு. கடல் பாசி பூங்கா, சிப்காட், அரசு மருத்துவமனை மேம்பாடு, புறவழிச்சாலை திட்டம் போன்றவை அறிவிப்பு நிலையில் உள்ளது.
இந்தத் தொகுதிக்காக இத்தனை திட்டங்களை தந்திருக்கும் நிலையில், இம்முறை நாமே இங்கு போட்டியிட்டால் என்ன என்ற ஆர்வம் திமுக-வுக்கு இருக்கிறது. ஆனால், இத்தனையும் கொண்டு வந்தது நாங்கள் தானே என்று சொல்லி மறுபடியும் இங்கு களமிறங்க நினைக்கிறார் சிபிஎம் சின்னதுரை. கடந்த 4 ஆண்டுகளில் கந்தர்வக்கோடைக்கு செய்து கொடுத்திருக்கும் திட்டங்களை பட்டியல் எடுத்துவரும் சின்னதுரை, “மீண்டும் இந்தத் தொகுதியை எங்களுக்குக் கேட்போம்” என்கிறார்.
இதற்கிடையில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியனும் இந்தத் தொகுதியில் உதயசூரியனை உதிக்க வைக்க அதிக ஆர்வமாக இருக்கிறார். இதைத் தெரிந்து கொண்டு, திமுக பெருந்தலைகள், கல்யாணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா என மக்களுக்கு நெருக்கமாகி வருகிறார்கள். அதேசமயம், “எனது தொகுதிக்கு ஒரு புதிய பேருந்து கூட விடவில்லை” என்று சொல்லி புதுக்கோட்டையில் அண்மையில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்ட புதிய பேருந்துகள் இயக்கம் தொடக்க விழாவை புறக்கணித்தார் சின்னதுரை எம்எல்ஏ.
இந்த முறையும் கந்தர்வக்கோட்டை சிபிஎம் கட்சிக்குத்தானா என புதுகை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியனிடம் கேட்டோம். “திமுக ஆட்சியில்தான் கந்தர்வக்கோட்டைக்கு நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இங்கு யார் போட்டியிட்டாலும் வெற்றி பெறலாம் என்ற அளவுக்கு திட்டங்களை தன்னிறைவாக்கி உள்ளோம். அதேசமயம், திமுக கூட்டணியில் யாருக்கு சீட் என்பதெல்லாம் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்” என்றார் அவர்.
இதேபோல, ஆலங்குடி தொகுதியில் 2006-லும் புதுக்கோட்டையில் 2011-லும் சிபிஐ வெற்றிபெற்றுள்ளது. அந்தக் கணக்கை வைத்து இரண்டில் ஒரு தொகுதியை இம்முறை திமுக-விடம் கேட்டுப் பெற சிபிஐ-யும் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், ஆலங்குடி தொகுதி இப்போது அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வசம் உள்ளது. அதனால் அமைச்சர் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு கொடுக்குமா திமுக என்பதை திட்டமாகச் சொல்வதற்கில்லை.
இரண்டில் ஒன்று என்ற கட்டாயக் கணக்கு வந்தால் தற்போது தங்கள் வசம் உள்ள புதுக்கோட்டை தொகுதியை சிபிஐ-க்கு திமுக விட்டுத்தர முன்வரலாம். அதேசமயம், கடந்த முறை திருமயம் தொகுதியில் சுமார் 1,300 வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்று வந்த அமைச்சர் ரகுபதி, இம்முறை ரிஸ்க் எடுக்காமல் புதுக்கோட்டைக்கு மாறிவிடலாமா என்ற யோசனையிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அப்படி அவர் தொகுதி மாறினால் புதுக்கோட்டையும் தோழர்களுக்கு சாத்தியமாகாது. அதேபோல், மாநிலங்களவை உறுப்பினராக இருந்த எம்.எம்.அப்துல்லாவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படாததால் அவரும் இம்முறை புதுக்கோட்டைக்காக மோதலாம் என்கிறார்கள்.
இதுகுறித்து புதுகை மாவட்ட சிபிஐ செயலாளர் த.செங்கோடனிடம் கேட்டதற்கு, “புதுக்கோட்டை தொகுதிக்காக திமுக-வில் பல முக்கிய தலைகள் மோதும் போது பிரச்சினையை சமாளிக்க தொகுதியை திமுக எங்களிடம் கொடுத்துவிட வாய்ப்பிருக்கிறது. புதுக்கோட்டை இல்லாதபட்சத்தில் ஆலங்குடியைக் கேட்டுப் பெற எங்கள் தலைமையை வலியுறுத்துவோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டாயம் ஒரு தொகுதியை கேட்டுப் பெற வேண்டும் என்பதில் தோழர்கள் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.