ஆண்டிபட்டி: தேனி மாவட்ட ஆறுகளில் நீர்வரத்து இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது
தேனி மாவட்டம் மற்றும் தமிழக எல்லையில் வெயிலின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து பல வாரங்களாகியதால் ஆறுகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. மூல வைகையைப் பொறுத்தளவில் பல வாரங்களாக வறண்ட நிலையில் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கடந்த மாதம் 21-ம் தேதியில் இருந்து குடிநீர் திட்டங்களுக்கு மட்டும் விநாடிக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
இந்த நீர் குடிநீர் திட்டங்களுக்கு பயன்படுத்திய பிறகு எஞ்சியுள்ள நீரையும் சூடான ஆற்றுப் படுகைகள் உறிஞ்சி விடுகின்றன. இதனால் வைகை அணைக்கான நீர் வரத்து படிப்படியாக குறைந்து நேற்று பூஜ்ய நிலையை அடைந்துள்ளது. ஆகவே அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
தற்போது, தேனி மாவட்டத்தில் மூல வைகை, பெரியாறு மற்றும் துணை ஆறுகள் எதிலும் நீரோட்டம் இல்லை. மேலும் இரண்டாம் போக சாகுபடி முடிந்தததால் கால்வாய் வழியே திறக்கப்பட்ட நீரும் நிறுத்தப் பட்டுள்ளது. நீர் ஆதாரங்களில் நீர்வரத்து இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், குடிநீர் திட்டங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

வைகை அணையைப் பொறுத்தளவில் குடிநீர் திட்டங்களுக்காக 72 கனஅடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகின்றன. நீர்வரத்து இல்லாததால் கோடை காலத்தை சமாளிக்க முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள், “நீர்வரத்து இல்லாததால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்திற்கு முன்றே தொடங்க உள்ளது. தமிழக – கேரள எல்லையில் மழைப் பொழிவு ஏற்பட்டு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடிநீர் திட்டங்களுக்கு போதுமான நீர் உள்ளது.” என்று கூறினர்.