சென்னை: உலக யோகா தினத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள சித்த மருத்துவர் கு.சிவராமனின் ஆரோக்கியா சித்த மருத்துவமனை சார்பில் வரும் 21-ம் தேதி (சனிக்கிழமை) உடல் நலத்துக்கான யோகா மற்றும் சித்த மருத்துவக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் வளாகத்தில் ‘யோகாவும் – உடல் நலமும்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மருத்துவ கருத்தரங்கில், தொற்றா வாழ்வியல் நோய்களான சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்டவற்றை தடுக்கும் யோகாசனங்களை செய்வது, உணவுப் பழக்கங்களில் செய்ய வேண்டிய மாறுதல்கள், வாழ்வியல் முறைகள் குறித்து விளக்கப்படுகிறது.
சேலம் வசிஷ்டா யோகா நிலையத்தைச் சேர்ந்த, உலகப் புகழ்பெற்ற உடல் நலத்துக்கான யோகா பயிற்சி நிபுணர் மருத்துவர் வெற்றிவேந்தன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சர்க்கரை நோயாளிகள் மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை பெறுவோர் உள்ளிட்டோர் மேற்கொள்ள வேண்டிய யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி (பிராணயாமம்) உள்ளிட்டவற்றை செயல் விளக்கத்துடன் கற்றுத் தருகிறார். புற்றுநோய்க்கு உரிய மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதுடன், கூடுதலாக யோகா பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் நோய் தாக்கத்தைக் குறைப்பது குறித்தும் அவர் விளக்குகிறார்.
ஆரோக்கியா சித்த மருத்துவமனையைச் சேர்ந்த சித்த மருத்துவர் பிரியதர்ஷினி, யோகா மற்றும் சித்த மருத்துவம் மூலம் உடல்நலனைப் பாதுகாப்பது குறித்து விளக்குகிறார். அதேபோல, சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற சித்த மருத்துவர் கு.சிவராமன் நல் வாழ்வுக்கான உணவு முறைகள், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள், சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து உரையாற்றுகிறார்.
வரும் 21-ம் தேதி காலை 8 முதல் பகல் 12 மணி வரை நடைபெறும் இந்த மருத்துவக் கருத்தரங்கில் பங்கேற்போர் அனைவருக்கும் நாடி பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும், அனைவருக்கும் இயற்கை உணவு மற்றும் மூலிகை தேநீர் வழங்கப்படுகின்றன. கருத்தரங்கின் நிறைவில் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் சித்த மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
தற்போதைய சூழலில் வாழ்வியல் தொற்றா நோய்கள் மக்களுக்கு பெரும் சவாலாக விளங்குகின்றன. இவற்றின் பிடிக்குள் சிக்காமல் இருக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் தக்க சிகிச்சை பெறவும், சிறந்த வாழ்வியல் மற்றும் உணவு முறைகள் குறித்து தெரிந்துகொள்ளவும், யோகா மூலம் உடல்நலனையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்ளவும் இந்தக் கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதில் 300 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி என்பதால், 9677117175, 9840461005 என்ற எண்கள் மூலமாக செல்போனில் தொடர்புகொண்டோ அல்லது வாட்ஸ்-அப் மூலமாகவோ முன்பதிவு செய்துகொள்ளலாம். இதில் பங்கேற்க கட்டணம் எதுவுமில்லை என்று ஆரோக்கியா சித்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.